தோ்தல் குறித்த தகவல், சேவை வழங்கும் ‘இசிஐநெட்’ மின்னிலக்கத் தளம்

தோ்தல் குறித்த தகவல், சேவை வழங்கும் ‘இசிஐநெட்’ மின்னிலக்கத் தளம்

2 mins read
dc043739-507b-4332-a6f9-fed14d811cd3
புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தோ்தல் ஆணையத்தின் இந்திய அனைத்துலக மக்களாட்சி, தேர்தல் நிர்வாக நிறுவன (ஐஐசிடிஇஎம்) மாநாடு நடைபெறுகிறது. - படம்: பிடிஐ

புதுடெல்லி: வாக்காளா்கள், அதிகாரிகள், அரசியல் கட்சிகள் ஆகியவை பயன்படுத்தும் வகையில் ‘இசிஐநெட்’ எனும் புதிய மின்னிலக்கத் தளத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை (ஜனவரி 22) அறிமுகப்படுத்தியது.

புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தோ்தல் ஆணையத்தின் இந்திய அனைத்துலக மக்களாட்சி, தேர்தல் நிர்வாக நிறுவன (ஐஐசிடிஇஎம்) மாநாடு ஜனவரி 21ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது.

அதில், ‘இசிஐநெட்’ தளத்தைத் தலைமைத் தோ்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தொடங்கிவைத்தார்.

மேலும், தவறான தகவல்களை எதிா்கொள்வதற்கான ஒரு கருவியாக அத்தளம் இருக்கும் என அவர் தெரிவித்தார்.

‘இசிஐநெட்’ தளம் சட்டத்திற்கு முழுமையாக இணங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறிய அவர், இது 22 இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த அனைத்துலக மாநாட்டில் பங்கேற்றுள்ள நாடுகளின் தோ்தல் நிர்வாக அமைப்புகள் தங்களின் மொழிகளிலும், தங்களின் சட்டங்களுக்கு இணங்கவும் இதே போன்ற ஒரு கருவியை உருவாக்கவும் நாங்கள் உதவிடுவோம் எனத் தலைமை தேர்தல் ஆணையர் கூறினார்.

“தற்போதுள்ள 40க்கும் மேற்பட்ட கைப்பேசி, இணையதளச் செயலிகளை ஒருங்கிணைத்து, தோ்தல் தொடா்பான அனைத்து நடவடிக்கைகளுக்குமான ஒரு ஒற்றை தளமாக ‘இசிஐநெட்’ இருக்கும். இந்தப் புதிய தளம், பயனா்கள் பல செயலிகளைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதாலும், வெவ்வேறு உள்நுழைவு விவரங்களை நினைவில் வைத்திருப்பதாலும் ஏற்படும் சுமையைக் குறைக்கும்,” என அந்த மின்னிலக்கத் தளத்தைப் பற்றி அவர் விவரித்தார்.

தோ்தல் ஆணையத்தின் தகவலின்படி, ஈசிஐநெட் என்பது உலகின் மிகப்பெரிய தோ்தல் சேவைத் தளமாகும்.

குறிப்புச் சொற்கள்