புதுடெல்லி: சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொருவரும் பல்வேறு வழிமுறைகளை கையாள்கின்றனர்.
அந்த வகையில், ஆசிரியையான ரூபல் நாகி தமது ஓவியங்களின் மூலம் குடிசைப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
45 வயதான ரூபல் நாகி, ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர். இந்தியாவில் உள்ள குடிசைப் பகுதிகளை தேர்வு செய்து, அங்குள்ள சுவர்களில் அழகான ஓவியங்களைத் தீட்டுகிறார் இந்த ஆசிரியை.
கல்வி சார்ந்த தமது ஓவியங்கள்மூலம் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குகிறார். இலக்கியம், அறிவியல், கணிதம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு பாடங்கள் இவரது ஓவியங்கள்மூலம் குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுகின்றன.
இவரது தலைமையில் செயல்படும் ‘ரூபல் நாகி ஓவிய அறக்கட்டளை’ மூலம் இந்தியா முழுவதும் 800க்கும் மேற்பட்ட கற்றல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்கள் மூலம், பள்ளிக்கூடம் செல்ல வசதியற்ற ஏழைக் குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி வழங்கப்படுகிறது.
ரூபல் நாகியின் இந்த அளப்பரிய சேவையைப் பாராட்டி, ‘வர்கீ அறக்கட்டளை’ என்ற அமைப்பு, ‘குளோபல் டீச்சர் பிரைஸ்’ (அனைத்துலக ஆசிரியைக்கான பரிசு) என்ற விருதை வழங்குவதாக அறிவித்தது. அண்மையில் துபாயில் நடைபெற்ற மாநாட்டின்போது ரூபல் நாகி இந்த விருதைப் பெற்றுக்கொண்டார் .

