ராஜஸ்தானில் சாலைப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து எட்டு பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் சாலைப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து எட்டு பேர் உயிரிழப்பு

படம்: மில்லினியம் போஸ்ட்

03 Nov 2026 - 4:54 pm

2 mins read

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் சாலை அமைக்கும் பணியின்போது மின்சாரக் கம்பிமீது இயந்திரம் உரசியதில் எட்டு ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஐவர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு, உதய்பூர்வாடி பகுதிக்கு உட்பட்ட சப்போலி கிராமத்தில், மக்கள் பங்களிப்புடன் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. திங்கட்கிழமை கலவை இயந்திரம் மூலம் ஜல்லி, சிமெண்ட் கலக்கும் பணி நடந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத வகையில் கலவை இயந்திரத்தின் மேல் பகுதி, உயரே சென்ற அதிஉயர் மின்னழுத்தக் கம்பியில் உரசியது. அதனால் கணப்பொழுதில் இயந்திரம் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததில், அருகில் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மீது மின் தாக்குதல் ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஹரிராம் குர்ஜார் 30, மங்கல்சந்த் குர்ஜார் 22, காளுராம் குர்ஜார் 20, பவன் குர்ஜார் 23, விஷ்ணு சைனி 38, சுரேஷ் சைனி 30, முகேஷ் சைனி 27, பதேசந்த் சைனி 32 ஆகிய எட்டுப் பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். படுகாயமடைந்த மூன்று பெண்கள் உட்பட ஐவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.50,000 நிதியுதவியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்