அகமதாபாத்: குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உதவி செய்வது போல நடித்து, முதிய தம்பதியினருக்கு மயக்க மருந்து கலந்த ‘லஸ்ஸி’ கொடுத்துக் கொள்ளையடித்தாகச் சந்தேகிக்கப்பட்ட பெண் கைது செய்யப்பட்டார்.
மயக்க மருந்தின் தாக்கம் காரணமாக முதியவர் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அது தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
அகமதாபாத்தின் தரியாபூர் பகுதியில் வசித்துவந்த அப்துல்பாய் இஸ்மாயில்பாய் சிபாய்க்கும் (81) அவரது மனைவிக்கும் வீட்டு வேலைகளில் உதவுவதாகக் கூறி லதாபென் (எ) ‘குலாப்’ சௌகான் (55) என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
தம்பதியினரின் நம்பிக்கையைப் பெற்ற அவர், சம்பவத்தன்று அவர்களுக்கு மயக்க மருந்து கலந்த லஸ்ஸியைக் கொடுத்துள்ளார். அதனை அருந்திய தம்பதியினர் மயக்கமடைந்த நிலையில், வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருள்களைக் கொள்ளையடித்துக் கொண்டு லதாபென் தப்பியோடினார்.
அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்ட தம்பதியர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்குச் சிகிச்சை பலனின்றி அப்துல்பாய் உயிரிழந்தார்; அவரது மனைவி தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் தப்பினார்.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குற்றப்பிரிவு காவலர்கள், சந்தேக நபரின் குற்றப் பின்னணியை ஆய்வு செய்தனர். அதில், அவர் ஏற்கெனவே அகமதாபாத்தின் பல்வேறு பகுதிகளில் திருட்டு, சூதாட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பது தெரியவந்தது.
தனியாக வசிக்கும் முதியவர்களைக் குறிவைத்து, உதவி செய்வது போல நடித்து அவர்களின் உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துக் கொள்ளையடிப்பதே இவரது வழக்கமான பாணியாகத் தொடர்ந்து வந்துள்ளது.
தலைமறைவாக இருந்த லதாபென்னை ஷாபூர் பகுதியில் கைது செய்த காவலர்கள், அவரிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

