திருவனந்தபுரம்: விரைவில் நடைபெற உள்ள கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் 85 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குப்பதிவைத் தேர்தல் ஆணையம் இலக்காகக் கொண்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள பத்திரிகை பணியகத்தால் (பிஐபி) தயாரிக்கப்பட்ட ‘ஓட்டறிவு’ என்ற தேர்தல் வழிகாட்டி நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அம்மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர், தேர்தல் குறித்து செய்திகளைச் சேகரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு உதவும்வகையில் இந்த நூல் வெளியிடப்படுவதாகக் குறிப்பிட்டார்.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலின்போது கேரளாவில் 75% வாக்குகள் பதிவாகின.
கேரளாவில் 140 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
அண்மைய நிலவரப்படி, அம்மாநிலத்தில் 2.72 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
தேர்தலில் வாக்காளர் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதாகக் குறிப்பிட்ட திரு ரத்தன், இம்முறை 85 விழுக்காடு வாக்குப்பதிவு என்ற லட்சிய இலக்கைத் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது என்றார்.
ஜனநாயக செயல்முறைகளை வலுப்படுத்துவதில் ஊடகங்களின் பங்கு அவசியம் என்று வலியுறுத்திய அவர், தேர்தல் தொடர்பான ஆக்கபூர்வமான, நேர்மறையான செய்திகளில் கவனம் செலுத்துமாறு செய்தியாளர்களைக் கேட்டுக் கொண்டார்.
நியாயமான செய்திகளின் மூலம் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வையும் தேர்தலில் அவர்களுடைய பங்களிப்பையும் கணிசமாக அதிகரிக்க முடியும் என்றும் திரு ரத்தன் கேல்கர் தெரிவித்தார்.

