தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம்: விசாரணையில் தலைமை நீதிபதி விலகல்

தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம்: விசாரணையில் தலைமை நீதிபதி விலகல்

1 mins read
8cbc15b9-1428-460a-b90e-8b77fd77ceba
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த். - கோப்புப் படம்: தினமலர்

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கு விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் விலகியிருக்கிறார்.

மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசு, 2023ல் கொண்டு வந்த தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்தை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோர் அமர்வில் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) விசாரணைக்கு வந்தன.

அப்போது, மனுதாரர் தரப்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், தனிப்பட்ட முறையில் தலைமை நீதிபதி மீது எதிர்மறையான கருத்துகள் எதுவும் இல்லை. ஆனால், தலைமை நீதிபதி தொடர்புடைய விவகாரம் என்பதால், இதை வேறு ஒரு அமர்வு விசாரித்தால் நன்றாக இருக்கும் என்று யோசனை தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

மேலும், அடுத்தடுத்து தலைமை நீதிபதிகளாக வருவதற்கு வாய்ப்புள்ள நீதிபதிகள் உள்ள அமர்வை தவிர்த்து, வேறொரு அமர்வில் வழக்கு பட்டியலிடப்படும் எனக்கூறி வழக்கை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்

தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவில் இருந்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கி, அதற்கு பதில் மத்திய அமைச்சர் ஒருவரை சேர்த்ததே இந்த வழக்கின் முக்கிய அம்சமாகும்.

தனது பதவியுடன் தொடர்புடைய ஒரு விவகாரத்தில் தானே தீர்ப்பளிப்பது சரியாக இருக்காது என்ற அடிப்படையில் வழக்கிலிருந்து விலகுவதாக தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்