ஹைதரபாத்: இந்தியாவின் சாலைகளில் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ ரிக்ஷாக்கள் அண்மைக் காலமாகப் பிரபலமாகி வருகின்றன.
மின்சாரத்தில் இயங்கும் குறைந்தது ஒரு ஆட்டோ ரிக்ஷா, 90 நொடிக்கும் ஒருமுறை அங்கு உற்பத்தியாகிறது.
இவ்வாண்டு செப்டம்பர் நிலவரப்படி, இந்தியாவில் விற்பனையான மூன்று ஆட்டோ ரிக்ஷாக்களில் இரண்டு, மின்சாரத்தில் இயங்குபவை.
அரசாங்க மானியங்கள், ஆட்டோ ரிக்ஷாக்களின் மேம்பட்ட தரம், குறைவான செயல்பாட்டுச் செலவு போன்றவற்றால் மின் ஆட்டோ ரிக்ஷாக்களை நாடுவோர் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் கணிசமாகக் கூடியுள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிட்டனர்.
புதுடெல்லியின் சாலைகளில்தான் மின் ஆட்டோ ரிக்ஷாக்கள் முதலில் கால்பதித்தன. நாளடைவில் இந்திய வாகனச் சந்தையில் அவைத் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துவிட்டன.
இந்தியாவின் வடக்குப் பகுதியில், ரயில் நிலையங்களுக்கும் பரபரப்பான சந்தைகளுக்கும் வெளியே மின் ஆட்டோ ரிக்ஷாக்கள் வாடிக்கையாளர்களை ஏற்றிச் செல்ல வரிசையில் நிற்பதை இப்போது காண முடிகிறது.
மின் ஆட்டோ ரிக்ஷாக்கள், சுற்றுப்புறத்துக்கு மட்டுமன்று, ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தையும் பெருக்க கைகொடுத்து வருகின்றன.
மின் ஆட்டோ ரிக்ஷாவிற்கு மின்னூட்டம் செய்யும் ஓட்டுநர்கள் ஒவ்வொரு நாளும் பல நூறு ரூபாய் மிச்சப்படுத்த முடிகிறது. அதன் மூலம் இன்னும் விலை கூடுதலான நவீன மின் ஆட்டோ ரிக்ஷாக்களை ஓட்டுநர்கள் வாங்கி தங்களையே மேம்படுத்திக்கொள்கின்றனர்.
