புதுடெல்லி: இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் மின்சாரக் கார் விற்பனை 57 விழுக்காடு அதிகரித்தது.
சந்தையில் புதிய கார்கள் அறிமுகமானது, மின்னூட்டி வசதி அதிகரித்தது ஆகியவை இந்த விற்பனை அதிகரிப்புக்கு முக்கியக் காரணிகளாக அமைந்தன.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 11,464 கார்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டில் 18,055 கார்கள் விற்பனையாகி உள்ளதாக வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்தது.
அந்த அமைப்பு வெளியிட்ட தரவுகளில் மேலும் சில தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் நன்றாக இருந்தாலும், டெஸ்லா நிறுவனத்தின் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்தியச் சந்தையில் கடந்த ஆண்டு அக்டோபரில் 40 கார்களை டெஸ்லா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. எனினும், நடப்பு ஆண்டில் விற்பனை 37.50% சரிவு கண்டுள்ளது.
இந்தியாவில் தற்போது ‘ஒய்எஸ்யூவி’ வகை சொகுசுக் கார்களை மட்டுமே டெஸ்லா விற்பனை செய்து வருகிறது.
கடந்த செப்டம்பரில் 64 கார்களை விற்பனை செய்திருந்தது அந்த நிறுவனம். அக்டோபரில் விற்பனையான 40 கார்களையும் சேர்த்து இதுவரை அந்நிறுவனத்தின் 104 கார்கள் விற்பனையாகி உள்ளன.

