லக்னோ: மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட மிரட்டல் காரணமாக, அயோத்தி ராமர் கோவிலில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
இந்த மிரட்டல் கடிதம் தமிழகத்தில் இருந்து வந்திருப்பதாக காவல்துறை தெரிவித்தது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மின்னஞ்சல் வந்திருப்பதைக் கோவில் அறக்கட்டளையின் மூத்த நிர்வாகி ஒருவர் உறுதி செய்துள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இதையடுத்து, காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
“திங்கட்கிழமை வந்த மிரட்டல் மின்னஞ்சல் ஆங்கிலத்தில் உள்ளது. தமிழகத்தில் இருந்து ஒருவர் இதை அனுப்பி உள்ளார். அது என்ன வகையான மிரட்டல் என்பதைக் கூற முடியாது. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது,” என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் குறித்து ராமர் கோவில் நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.