மலேசியாவுக்குச் செல்லும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தூதரகம் எச்சரிக்கை

மலேசியாவுக்குச் செல்லும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தூதரகம் எச்சரிக்கை

கோப்புப் படம்: என்எஸ்டி

22 Sep 2026 - 8:27 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் 30 நாள்கள் விசா இல்லா நுழைவு வசதியைப் பயன்படுத்தி, அங்கு வேலை தேட முயற்சி செய்யும் இந்தியர்களுக்கு மலேசியாவில் உள்ள இந்திய உயர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலேசிய அரசு வழங்கியுள்ள சலுகை, சுற்றுலா, குறுகிய கால சமூகப் பயணங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று இந்தியத் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

அண்மைக் காலமாக, இந்திய குடிமக்கள் சுற்றுலா விசாவில் மலேசியா சென்று, வேலை பெற முயற்சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகத் தூதரகம் தெரிவித்துள்ளது.

போலி வேலைவாய்ப்பு முகவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி பலர் ஏமாறுவதாகவும் இதனால் முறையான ஆவணங்கள் இன்றி தங்கும் நிலை ஏற்படுவதாகவும் தூதரகம் கூறியது.

இதன்மூலம் அங்கு வேலை செய்ய சட்டப்படி அனுமதி இல்லை. மலேசியாவில் பணிபுரிய விரும்புபவர்கள், புறப்படுவதற்கு முன்பே முறையான பணி விசா, அனுமதிப் பத்திரங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா விசாவில் சென்று சட்டவிரோதமாகப் பணியாற்றினால், கைது நடவடிக்கை, சிறைத்தண்டனை, அபராதம், மலேசியாவிற்குள் மீண்டும் நுழையத் தடை போன்ற கடுமையான சட்ட விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அந்நாடு எச்சரித்துள்ளது.

மலேசியாவிற்கு சுற்றுலா செல்லத் திட்டமிடும் இந்தியப் பயணிகள், பயணத்துக்குரிய அனைத்து சட்டபூர்வ ஆவணங்களையும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறைந்தது ஆறு மாதக் கால அவகாசம் உள்ள கடப்பிதழ், உறுதிசெய்யப்பட்ட இருவழி விமானப் பயணச்சீட்டு, தங்குவிடுதி அல்லது தங்குமிடம் குறித்த விவரங்கள், மலேசியாவுக்குச் செல்வதற்கு மூன்று நாள்களுக்கு முன்பாக இணையவழி பூர்த்திசெய்யப்பட்ட மலேசிய மின்னிலக்க வருகை அட்டை ஆகியவற்றைப் பயணிகள் வைத்திருப்பது அவசியமாகிறது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாவிசாகடப்பிதழ்குடிநுழைவுசுற்றுலாப் பயணிகள்தங்குமிடம்ஆணையம்தூதரகம்