புதுடெல்லி: சூதாட்டச் செயலிகள் தொடர்புடைய பணமோசடி வழக்கில், கூகல், மெட்டா நிறுவனங்களுக்கு அமலாக்கத் துறை அழைப்பானை அனுப்பியுள்ளது.
விசாரணைக்காகத் திங்கட்கிழமை (ஜூலை 21) டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமையகத்தில் முன்னிலையாகும்படி கூகல், மெட்டா நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு அழைப்பானை அனுப்பப்பட்டுள்ளது.
சட்டவிரோத சூதாட்டச் செயலிகளை விளம்பரப்படுத்துவதில் கூகல், மெட்டா ஆகிய இணைய தளங்களின் பங்குகுறித்து அமலாக்கத் துறை விசாரிக்கவுள்ளது.
“கூகல், மெட்டா நிறுவனங்கள் தங்களுடைய தளங்கள்மூலம் சட்டவிரோதச் சூதாட்டச் செயலிகளை விளம்பரப்படுத்தி பயனர்களைச் சென்றடைய உதவுகின்றன” என்று அமலாக்கத் துறை தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சட்டவிரோத சூதாட்டச் செயலிகளான வி மணி, விஎம் டிரேடிங், 11ஸ்டார்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
இந்தச் சூதாட்டச் செயலிகள் தொடர்பான வழக்கில் மும்பையில் நான்கு இடங்களில் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ.3.3 கோடி பணம், நகைகள், வெளிநாட்டு ரொக்கம், சொகுசு வாகனம் எனப் பல சொத்துகளை அமலாக்கத் துறை அண்மையில் பறிமுதல் செய்தது.
முன்னதாக, சூதாட்டச் செயலிக்கு விளம்பரம் செய்தது தொடர்பாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 29 நடிகர், நடிகைகள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.