அட்லாண்டா: இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் அமைதி, பொருளியல் பாதுகாப்பை உறுதி செய்வதே தற்போதைய முக்கியத் தேவை என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அட்லாண்டாவில் நடைபெற்ற குவாட் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்தியாவின் முன்னுரிமைகள் குறித்தும் அவர் விவரித்தார்.
விநியோகச் சங்கிலி பாதுகாப்பை உறுதிசெய்வது, முக்கியமான கனிமங்கள், எரிசக்தி பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ‘குவாட்’ நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ, ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் ஆகியோருடன் திரு ஜெய்சங்கரும் இணைந்து பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், வட்டார முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
முக்கியக் கனிமங்கள், தூய்மையான ஆற்றல், அதிநவீன தொழில்நுட்பத் துறைகளில் விநியோகச் சங்கிலியை பலப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
சந்தை அல்லாத பிற பொருளியல் நடைமுறைகளைத் தடுப்பதற்கும் வட்டார பொருளியல் அழுத்தங்களை எதிர்கொள்வதற்கும் கூட்டாகச் செயல்பட முடிவு செய்யப்பட்டது.
இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் நம்பகமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த 85 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியுதவி வழங்கப்பட உள்ளது.
மின்னணுக் கழிவுகளில் இருந்து முக்கியமான கனிமங்களை மீட்டெடுக்கும் மையங்களை இந்தியா, ஆசியான் நாடுகளில் மேம்படுத்த அமெரிக்கா 10 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளது.
கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சென்னை, பெர்த் நகரங்களுக்கு இடையே அண்மையில் கூட்டு சுற்றுக்காவல் நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
மேலும், இணையவழி மூலம் நடைபெறும் நிதி மோசடிகள், எல்லை தாண்டிய குற்றச் செயல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அனைத்து நாடுகளும் உறுதியளித்துள்ளன.
அட்லாண்டாவில் நடந்த ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு இடையே நடைபெற்ற இந்த ‘குவாட்’ சந்திப்பு, உறுப்பு நாடுகளுக்கு இடையே நம்பிக்கையையும் நடைமுறைக்குச் சாத்தியமான திட்டங்களையும் மேலும் வலுப்படுத்தியுள்ளது.
