தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேம்பட்ட ஐஃபோன்கள் இந்தியாவில் தயாரிப்பு

2 mins read
9b84c5d1-362b-4203-888b-d219ff12b6a4
ஐஃபோன் 16 புரோ மேக்ஸ் திறன்பேசி. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து ஐஃபோன் 16 வகை திறன்பேசிகளும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அவற்றில் ஐஃபோன் 16 புரோ (16 pro) வகை திறன்பேசியும் அடங்கும். முதன்முறையாக ஐஃபோன் புரோ வகை திறன்பேசிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

வரும் மாதங்களில் அந்நாட்டில் கூடுதல் சில்லறை வர்த்தகக் கடைகளைத் திறக்கவும் ஆப்பிள் திட்டங்களை வரைந்து வருகிறது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஐஃபோன் 16 புரோ, புரோ மேக்ஸ் வகை திறன்பேசிகள் வரும் வாரங்களில் அந்நாட்டில் உள்ள கடைகளில் விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை சில நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படும்.

தைவானிய நிறுவனங்களான ஃபாக்ஸ்கோன், பெகட்ரான் மற்றும் டாடா நிறுவனத்துக்குச் சொந்தமான விஸ்ட்ரோன் உள்ளிட்டவை இந்தியாவில் ஐஃபோன் திறன்பேசிகளை உற்பத்தி செய்கின்றன. டாடா குழுமம், திறன்பேசி உற்பத்தியைப் பொறுத்தவரை ஆப்பிளின் ஒரே இந்தியப் பங்காளி நிறுவனமாகும்.

உலகத் திறன்பேசி மையமாக உருவெடுக்கும் இலக்கை இந்தியா கொண்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் திறன்பேசிகளை உற்பத்தி செய்வதன் தொடர்பில் ஆப்பிளின் திட்டங்கள், இந்தியாவின் கனவுகளுக்கேற்ப அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 நிதியாண்டில் ஆப்பிள் தனது 14 விழுக்காட்டு திறன்பேசிகளை இந்தியாவில் தயார் செய்ததாக 2023-24ஆம் ஆண்டுகளுக்கான பொருளியல் கருத்தாய்வில் தெரியவந்தது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடரும் வர்த்தக ரீதியான பதற்றநிலை, 2020ஆம் ஆண்டில் தலைதூக்கிய கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலால் விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்ட இடையூறுகள் ஆகியவற்றின் காரணமாக கடந்த ஐந்தாண்டுகளில் ஆப்பிள் உள்ளிட்ட பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவை சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொண்டு வந்துள்ளன.

2014ல் இந்தியா, திறன்பேசிகளை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் 23வது இடத்தில் இருந்தது. 2024 நிதியாண்டில் அந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட திறன்பேசிகளில் 31 விழுக்காடு மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்