சென்னை: தமிழக நீர்நிலைகளைப் புனரமைக்கும் பணிகளில் அரசு சாராத அமைப்புகள், தொண்டூழியர்கள் ஆகியோரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில், ‘ஏரி’ (https://eri.tn.gov.in) எனும் புதிய இணையத்தளத்தை தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைத்தார்.
பெருநிறுவனச் சமூகப் பொறுப்புணர்வு நிதி, தொண்டூழியர்களின் பங்களிப்புடன் குளங்கள், ஏரிகளைச் சீரமைக்க அரசுத் துறைகளிடம் தடையின்மைச் சான்றிதழ் உள்ளிட்டவற்றைப் பெறுவதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களையும் நோக்கில் நீர்வளத் துறை ‘ ஏரி’ தளத்தை உருவாக்கியுள்ளது.
ஐந்து அரசுத் துறைகளின்கீழ் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நீர்நிலைகளின் விவரங்கள் அதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
தூர்வாருதல், கரைகளைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறையின்மூலம், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 15 நாள்களுக்குள் வெளிப்படைத்தன்மையுடன் அனுமதி வழங்கப்படும்.
நிகழ்வில் ‘சிறுதுளி’, ‘தானம்’ உள்ளிட்ட ஐந்து முன்னணி அரசு சாராத அமைப்புகளுக்குத் தடையின்மைச் சான்றிதழ்களை வழங்கிய முதல்வர், பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டார். அந்நிகழ்வில் அமைச்சர்களும் தலைமைச் செயலாளரும் உடனிருந்தனர்.
