லக்னோ: பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, லக்னோவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கடந்த மார்ச் 14ஆம் தேதி காஸியாபாத் கௌசாம்பி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையங்களில் சூரிய சக்தியில் இயங்கும் கேமராக்களைப் பொருத்தி, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு நேரலைக் காட்சிகளை அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
அதையடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், நாட்டின் முக்கிய உள்கட்டமைப்பு, பாதுகாப்புத் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டது தெரியவந்தது.
சந்தேகப் பேர்வழிகள் அனைவரும் இந்தியச் சான்றிதழ்களைப் பயன்படுத்திப் பெறப்பட்ட சிம் அட்டைகள் மூலம் உளவு கேமராக்களை இயக்கி, தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில் உளவு கேமராக்கள் மூலம் எதிரி நாட்டுக்கு இந்தியாவின் முக்கியப் பகுதிகள் சார்ந்த தகவல்களை புகைப்படங்கள், காணொளிகளைக் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்ற நபர்கள் பகிர்ந்தது உறுதிசெய்யப்பட்டது. இதற்காக அவர்கள் இந்திய சிம் அட்டைகளைப் பெற்றதும் தெரியவந்துள்ளது என்றனர்.
இதையடுத்து, சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச்சட்டம், அரசு ரகசியங்கள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
அதில் தொடர்புடைய ஐந்து சிறுவர்கள் குறித்த விரிவான விசாரணை அறிக்கை, ஏற்கெனவே காஸியாபாத் சிறுவர் நீதி வாரியத்திடம் மே மாதம் சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


