நாளுக்கொரு வரி விதித்தால் உலக நாடுகளை அச்சுறுத்தி அவற்றை தமது கொள்கைகளுக்கு இணங்கச் செய்யலாம் என்ற அமெரிக்காவின் எண்ணத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக வந்துசேர்ந்துள்ளது இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே கையெழுத்தாகியுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்.
இந்தியாவின் 77வது குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி, இந்தியாவையும் 27 நாடுகளையும் உள்ளடக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை ஏறத்தாழ 18 ஆண்டுகளாக நீடித்துவந்த நிலையில், தற்போது செயல்வடிவம் பெறுவதற்காக உடன்பாடாக உருமாறியுள்ளது.
இந்தியக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய மன்றத் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயனும் பங்கேற்க, உலகின் 2வது பெரிய பொருளியலான ஐரோப்பாவுக்கும் 4வது பெரிய பொருளியலான இந்தியாவிற்கும் இடையிலான இந்த உடன்பாடு முடிவாகியது.
‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ எனக் குறிப்பிடப்படும் இந்த ஒப்பந்தம், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 விழுக்காட்டையும் உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கையும் கொண்டுள்ளதாகக் கூறிய இந்தியப் பிரதமர் மோடி, இந்த ஒப்பந்தம் இருதரப்புக்கும் முதலீடு, வர்த்தகம், வருவாய், கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்தியப் பொருளியலுக்கு வளர்ச்சியை வாரியிறைக்கும் ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியப் பொருளியலுக்கு கிடைக்கவுள்ள பலன்களின் பட்டியலும் நீண்டுகொண்டே போகிறது. முதலாவதாக, ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வேதிப்பொருள்கள், மின்னியல், மருந்துப் பொருள்கள் மீதான வரி ரத்து செய்யப்படவுள்ளது.
குறிப்பாக இயந்திரங்கள்மீது 44% வரையிலும் வேதிப்பொருள்கள்மீது 22% வரையிலும் மருந்துகள்மீது 11% வரையிலும் விதிக்கப்படும் வரிகள் பெரும்பாலும் நீக்கப்படும் என்பதும் நாடுகளுக்கு கிடைக்கவுள்ள நற்செய்தி.
மேலும் பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ்-பென்ஸ் உள்ளிட்ட சொகுசு கார்களுக்கான வரிகள், அதிகபட்சமான 110 விழுக்காட்டிலிருந்து படிப்படியாக 10 விழுக்காடு வரை குறைக்கப்படும் சூழலும் ஏற்படும்.
தொடர்புடைய செய்திகள்
மாணவர்களுக்கும் பச்சைக்கொடி காட்டிய முக்கிய அம்சம்
இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் வேளாண் பொருள்கள் மீதான வரி விதிப்பு முற்றிலும் நீக்கப்படாத நிலை நீடித்தாலும், இன்னும் சில ஆண்டுகளில் ஏறத்தாழ 90 விழுக்காட்டுக்கும் அதிகமான பொருள்களின் வரி விதிப்பு சுழியம் என்ற நிலையை எட்டிவிடும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஐரோப்பாவிற்குப் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களுக்குப் படிப்பு முடிந்த பிறகு அங்கு தங்குவதற்கான ஒன்பது மாதகால விசாவுக்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஒப்பந்தம் மூலம் அடுத்த மூவாண்டுகளில் ஆயத்த ஆடை சார்ந்த வணிகம் பன்மடங்கு உயரும் என்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு மன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதனால் ஐரோப்பியச் சந்தையில் இந்தியாவின் போட்டித்திறன் உயர்ந்து, புதிய வேலைவாய்ப்புகளும் அதிகரித்து, ஆயத்த ஆடை ஏற்றுமதி, ஆண்டுக்கு 20 முதல் 25 விழுக்காடு வரை வளா்ச்சி காணும் என்றும் தொழில்துறை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. தற்போது ஐரோப்பிய ஒன்றியச் சந்தையில் இந்தியாவின் வளா்ச்சி விகிதம் 3.01 விழுக்காடு மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், இந்தியாவுக்கும் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் எதிரான வர்த்தகப் போரை தீவிரப்படுத்துவதாக அச்சுறுத்தியதன் விளைவே, அநேக ஆண்டுகாலமாக விவாதமாக இருந்து வந்த வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாக பேசிமுடிக்க வைத்தது என்பதும் மறுப்பதற்கியலாது.
இதற்கிடையே, இந்தியப் பொருளியலைத் தூக்கிநிறுத்தும் என்று கருதப்படும் இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
திரு டிரம்ப்பின் முதன்மைப் பொருளியல் ஆலோசகரான ஸ்காட் பெசெண்ட், “இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவதன் மூலம் ஐரோப்பா மறைமுகமாக ரஷ்யா-உக்ரேன் போருக்கு உதவி செய்கிறது,” என்று சாடியுள்ளார்.
எனினும், இவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒப்பந்தத்தை சாத்தியப்படுத்திய திரு கோஸ்டாவை ‘லிஸ்பனின் காந்தி’ என்று அழைத்து திரு மோடி புகழ்மாலை சூட்டியுள்ளார்.
ஒப்பந்தம் குறித்துப் பேசிய திரு கோஸ்டா, “புவிசார் அரசியல் பதற்றத்தால் உலகமும் ஒழுங்குமுறையும் மாறி வருகிறது. இத்தகைய சூழலில் இந்தியா, ஐரோப்பா இடையிலான இந்தப் பங்காளித்துவம் வரலாற்றுச் சிறப்புமிக்கது.
“வேகமாக வளர்ச்சிப் பாதையில் முன்னேறும் இந்தியா, எங்களது நம்பகமான கூட்டாளியாக உருவெடுத்துள்ளது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே. இந்த உறவு எதிர்காலத்தில் இன்னும் வலுவடையும்,” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான இந்த ஒப்பந்தம் வெறும் ஏட்டளவில்தான் இருக்குமா? உலக நாடுகளை சூழ்ந்துள்ள நிலையற்ற பொருளியல் கருமேகங்களை கலைந்துபோகச் செய்து வெற்றிக் கூட்டணியாக மலருமா? கோடிக்கணக்கான மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை அளித்து அவர்கள் வாழ்வை மலரச் செய்யுமா? காலம் கனிந்திட காத்திருக்கிறது உலகம்.

