மும்பை: சிங்கப்பூரில் வசிக்கும் தன் பெற்றோரைப் பார்க்க சிங்கப்பூரரான தாய் தனது 9 வயது மகனை சிங்கப்பூர் அழைத்துச் செல்வதைத் தாமதப்படுத்த மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
பயணத்தை மேலும் தள்ளிப்போட வேண்டும் என்று முன்னாள் கணவர் நீதிமன்றத்தை நாடியிருந்தார். மாதின் பயணம் முதலில் டிசம்பர் 22 முதல் 2025 ஜனவரி 4 வரை திட்டமிடப்பட்டிருந்தது. அவர் வழக்குத் தொடர்ந்ததால் அது தாமதமானது.
குடும்ப நீதிமன்றம் வழங்கிய அனுமதியில் தலையிட விரும்பவில்லை என்று உயர் நீதிமன்றம் டிசம்பர் 26 அன்று கூறியது.
சிங்கப்பூரரான மனைவியும் இந்தியரான கணவரும் 2022 செப்டம்பரில் விவாகரத்துப் பெற்றபோது, நான்கு வார முன்னறிவிப்பின்றி தந்தையோ, தாயோ மகனை இந்தியாலிருந்து வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்ற நிபந்தனைக்கு உடன்பட்டனர்.
பின்னர் இருவரும் மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளின் படி, ஒப்புதல் விதிமுறைகளை பொருத்தமான சட்ட அமைப்பால் மாற்றியமைக்க முடியும் என்று 2024 ஜனவரி 19 அன்று நீதிமன்றம் கூறியது.
குடும்ப நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, சிங்கப்பூரர்களான தாயும் மகனும் அங்கு செல்வது ஆபத்து என்பதால் தடை கோரி தந்தை உயர்நீதி மன்றத்தை நாடினார்.
மகன் திரும்பி வராவிட்டால் தந்தை மகனைப் பார்க்க முடியாது போகும் என்று அவரது வழக்கறிஞர் கூறினார். ஆனால், ஒப்புதல் விதிமுறைகள் இருவரையும் கட்டுப்படுத்துவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
மகனை நேர்காணல் செய்ய வேண்டும் என்ற தந்தையின் கோரிக்கையை நீதிபதி மறுத்துவிட்டார். மகனின் வயது காரணமாக பெற்றோரின் பெயர்களை வெளியிட நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.