திருவனந்தபுரம்/பெங்களூரு: பெட்ரோலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் ‘எத்தனால்’ கலக்கப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, கர்நாடகாவும் கேரளாவும் சோதனை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.
கர்நாடகாவில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனையில், அனுமதிக்கப்பட்ட 20 விழுக்காட்டு வரம்பை மீறி, கிட்டத்தட்ட 31.2 விழுக்காடுவரை ‘எத்தனால்’ கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக அந்த மாநில அரசாங்கம் தகவல் வெளியிட்டது.
இதற்கிடையே, கேரள அரசாங்கம் மாநிலம் முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் திடீர் சோதனைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
அது தொடர்பாக முதலமைச்சர் வி.டி. சதீசனுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் கேரள பொது விநியோக, பயனீட்டாளர் விவகாரத் துறை அமைச்சர் அனூப் ஜேக்கப் தெரிவித்தார். முதற்கட்டமாக திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய நான்கு முக்கிய மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளன.
முன்கூட்டியே அறிவிக்கப்படாமல், திடீரென எந்தெந்த பெட்ரோல் நிலையங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
எரிபொருளில் கூடுதல் ‘எத்தனால்’ கலப்போ முறைகேடுகளோ கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள்மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, கர்நாடக அரசின் குற்றச்சாட்டுகளைப் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மறுத்துள்ளன. அந்தச் சோதனைகள் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன.
தற்போதைய சூழலில் விரிவான விளக்கத்தை அளித்து, எண்ணெய் நிறுவனங்களின் தீபாவளிக் கொண்டாட்டங்களைக் கெடுக்க அரசு விரும்பவில்லை என்று கர்நாடக உணவு, குடிமைப் பொருள் விநியோக, பயனீட்டாளர் விவகாரத் துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் கூறினார்.
பண்டிகைக் காலத்திற்குப் பிறகு அரசு விரிவான பதிலை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், “பெட்ரோல் நிலையங்களில் மட்டும் சோதனை செய்யவில்லை. ‘எத்தனால்’ கலப்படம் செய்யும் பகுதியிலும் சோதனை செய்தோம். பெட்ரோலில் எப்படிக் கலப்படம் செய்யப்படுகிறது என்பது குறித்த ஆவணங்களையும் சேகரித்துள்ளோம்,” என்று கர்நாடக முதலமைச்சர் டிகே சிவகுமார் கூறியிருக்கிறார்.
“இந்தப் பிரச்சினையை நாங்கள் தேசிய அளவில் மிக தீவிரமாகக் கொண்டு செல்வோம். இந்த மோசமான நிலையை நாங்கள் கண்டிக்கிறோம்,” என்றார் அவர்.
