புதுடெல்லி: இந்தியாவிலிருந்து நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கைப்பேசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் கைப்பேசி ஏற்றுமதியில் இந்தியா புதிய பாய்ச்சலைக் கண்டுள்ளதாக துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபல ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் ‘ஐஃபோன்’ தயாரிப்பு ஆலைகள் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் கைப்பேசி ஏற்றுமதி விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் எதிரொலியாக, நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும், கைப்பேசி ஏற்றுமதியின் மதிப்பானது US$11.7 பில்லியன் டாலராக (14.6 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது ஒரு லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கைப்பேசிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று சுட்டிக்காட்டும் நிபுணர்கள், முந்திய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் கைப்பேசி ஏற்றுமதி விகிதமானது 55 விழுக்காடு உயர்ந்துள்ளது என்கிறார்கள். இதன் மூலம் நாட்டின் மொத்த கைப்பேசி ஏற்றுமதியில் 72% அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகிறது.
அமெரிக்காவில் தற்போது விற்பனை செய்யப்படும் ‘ஐஃபோன்’களில் பெரும் பகுதி இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதாக அதன் முதன்மைச் செயலதிகாரி டின் குக் கடந்த ஜூலை மாதம் கூறி வந்தார். அதற்கேற்ப, நடப்பாண்டில் இந்தியா கைப்பேசி ஏற்றுமதியில் புதிய மைல்கல்லை எட்டிப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பாண்டில் அமெரிக்காவுக்கான இந்தியாவின் திறன்பேசி ஏற்றுமதியானது 193% அதிகரித்துள்ளது. இது ஆண்டுகளுக்கு இடையேயான ஏற்றுமதி அளவில் 55% உயர்வு என்று இந்திய கைப்பேசி மற்றும் மின்னணு சங்கம் (India Cellular & Electronics Association) தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் ‘ஆப்பிள் ஐஃபோன்’ விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் ‘ஆப்பிள் ஐஃபோன்’ ஏற்றுமதி வளர்ச்சிக்கான முக்கிய உந்துசக்தியாகக் கருதப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் முதல் ஐந்து மாதங்களில் மட்டும், அமெரிக்காவுக்கான இந்திய திறன்பேசி ஏற்றுமதி, US$ 8.43 பில்லியன் டாலரை எட்டியது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், இந்தத் தொகை US$2.88 பில்லியன் டாலராக இருந்தது. இதன் மூலம் ஆண்டுகளுக்கு இடையேயான ஏற்றுமதி அளவில் 55% உயர்வு பதிவாகி உள்ளது என்று ஐசிஇஏ (ICEA) தெரிவித்துள்ளது.