மும்பை: இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பை மாநகரம் இன்னும் மழையின் பிடியிலிருந்து விடுபடவில்லை. அங்கு திங்கட்கிழமை காலை பெய்த பலத்த மழை காரணமாகப் போக்குவரத்து நிலைகுத்தியது.
ஆகஸ்ட் 18, 19ஆம் தேதிகளில் மும்பையில் மழை கொட்டித் தீர்க்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. அதன்படி திங்கட்கிழமை காலையில் பெய்யத் தொடங்கிய மழை, அடுத்த சில மணிநேரங்களில் வலுக்கத் தொடங்கியது.
மும்பையின் சில பகுதிகளில் அதிகபட்சமாக 140 மில்லிமீட்டர் மழை பதிவானது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டியிருந்தது. மும்பையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அங்கு விமானச் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 17ஆம் தேதி நள்ளிரவில் பெய்த கனமழையின்போது இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றின் படிக்கட்டுகள் இடிந்து விழுந்[Ϟ]ததில் இருவர் காயமடைந்தனர்.
சிவப்பு எச்சரிக்கையைத் தொடர்ந்து மும்பை மக்கள் காரணமின்றி வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
மோசமான வானிலை நிலவியதன் காரணமாக மும்பை வந்த ஒன்பது விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. அவை வேறு நகரங்களுக்குத் திருப்பிவிடப்பட்டனவா என்பது குறித்து உடனடித் தகவல் ஏதும் வெளியாகவில்லை.
கடந்த இரு வாரங்களாக இமயமலையை ஒட்டியுள்ள இந்தியப் பகுதிகளில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. மழை, நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில், மும்பையை ஆட்டிப் படைத்து வருகிறது கனமழை.
ஆந்திரா அருகே வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, மகாராஷ்டிராவில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்து இருந்தது. அதன்படி, கடந்த சில நாள்களாக மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
திங்கட்கிழமை அதிகாலை பெய்த மழையால் அந்தேரி, காட்கோபர், நவி மும்பை, தெற்கு மும்பையின் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.