சர்க்கரை விலை உயர்வைத் தடுக்க வரிவிலக்கு இறக்குமதி காலம் நீட்டிப்பு

சர்க்கரை விலை உயர்வைத் தடுக்க வரிவிலக்கு இறக்குமதி காலம் நீட்டிப்பு

கோப்புப் படம்: இன்ட்டிபென்டன்ட்

23 Oct 2026 - 5:24 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் வேளையில், சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்தவும் விநியோகத்தைச் சீராக்கவும் சுத்திகரிக்கப்படாத சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாகக் கரும்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் கடந்த சில மாதங்களில் இந்தியாவில் சர்க்கரை விலை ஏறக்குறைய 30 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.

நடப்பு ஆண்டில் சர்க்கரை உற்பத்தி 343 லட்சம் டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது 306 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது. நாட்டின் வருடாந்தரப் பயன்பாட்டுக்கு 280 லட்சம் டன் சர்க்கரை தேவை என்றாலும், அவசரகாலக் கையிருப்பு வழக்கத்தைவிடக் குறைவாக உள்ளதால் சந்தையில் பதற்றம் நிலவுகிறது.

உள்நாட்டு இருப்பை அதிகரிக்கும் நோக்கில் 10 லட்சம் மெட்ரிக் டன் கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு அனுமதி அளித்தது. முன்னதாக, அக்டோபர் 31 வரை மட்டுமே வழங்கப்பட்டிருந்த இந்த அனுமதியை தற்போது டிசம்பர் 31 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இதுவரை 2.6 லட்சம் மெட்ரிக் டன் கச்சா சர்க்கரை இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்துலகச் சந்தையில் விலை குறையும்போது இந்தக் கூடுதல் அவகாசம் இறக்குமதியை விரைவுபடுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், செயற்கைப் பற்றாக்குறை, பதுக்கலைத் தடுக்க மத்திய, மாநில அரசு அதிகாரிகளைக் கொண்ட கூட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சர்க்கரை ஆலைகள், வியாபாரிகளின் இருப்பு விவரங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்