புதுடெல்லி: இந்திய அரசு தனது முக்கியக் கிராமப்புறத் தூய்மைப் பணித் திட்டமான தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாம் கட்டத்தை 2028ஆம் ஆண்டு மார்ச் வரை நீட்டித்துள்ளது.
இதன்மூலம் 2027-28 மத்திய வரவுசெலவுத் திட்டத்தில் அந்த இயக்கத்திற்காக ஏறத்தாழ 7,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய அது திட்டமிட்டுள்ளது.
தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாம் கட்டத்தை நீட்டிக்க நீர்வள அமைச்சின்கீழ் செயல்படும் குடிநீர், துப்புரவுத் துறை விடுத்த கோரிக்கைக்கு நிதி அமைச்சு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) ஒப்புதல் அளித்தது.
இயக்கத்தின் ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீட்டிற்குள் அனைத்துக் கிராமங்களும் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற நிலையை அடைவதை 2028 மார்ச் 31ஆம் தேதிக்குள் அத்துறை உறுதிசெய்ய வேண்டும்.
மேற்குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் இரண்டாம் கட்டத்தை முழுமையாக நிறைவுசெய்ய வேண்டும் என்றும் எவ்விதக் கால நீட்டிப்பும் வழங்கப்பட மாட்டாது என்றும் நிதி அமைச்சு தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அமைச்சரவை, 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது.
தொடக்கத்தில் 2024-25ஆம் ஆண்டு முடிக்கத் திட்டமிடப்பட்டு, பின்னர், 2027ஆம் ஆண்டு மார்ச் வரை அது நீட்டிக்கப்பட்டது.
இணையத்தில் வெளியான தகவலின்படி, இந்தியாவில் உள்ள 5.86 லட்சம் கிராமங்களில் இதுவரை 5.70 லட்சம் கிராமங்கள் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத நிலையைப் பெற்றுள்ளன.
அத்திட்டத்திற்கான மொத்தச் செலவான 1,40,881 கோடி ரூபாயில், 52,497 கோடி ரூபாய் குடிநீர், துப்புரவுத் துறையின் வரவுசெலவுத் திட்டத்திலிருந்து வழங்கப்படுகிறது.
15வது நிதிக் குழு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கழிவு மேலாண்மை வாயிலாகக் கிடைக்கும் வருவாய் ஆகியவற்றின் மூலம் எஞ்சிய நிதி ஒருங்கிணைக்கப்படுகிறது.
கடந்த ஆறு ஆண்டுகளில் 28,726 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. நடப்பு 2026-27 நிதியாண்டிற்கு 7,192 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
