மும்பை: முன்னணி இந்தி நடிகர் ரன்வீர் சிங்கிடம் பணம் கேட்டு அடையாளம் தெரியாத ஒருவர் விடுத்துள்ள மிரட்டல் இந்தித் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் மும்பை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
தமது ‘வாட்ஸ்அப்’ எண்ணுக்கு மிரட்டல் வந்ததாகவும் கோடிக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ரன்வீர் சிங் கூறியுள்ளார்.
இதையடுத்து, மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தனியார் பாதுகாவலர்களும் ரன்வீர் வீட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மிரட்டலை குண்டர் கும்பலைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் விடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கடந்த வாரம்தான் பிரபல இந்தித் திரைப்படத் தயாரிப்பாளர் ரோஹித் ஷெட்டியின் வீட்டுக்கு வெளியே லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில், ரன்வீர் சிங்குக்கும் மிரட்டல் வந்துள்ளது.

