ஜெய்ப்பூர்: வணிகத்திற்கான சிறந்த நாடு இந்தியா என்றும் இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டணியானது இருதரப்புக்குமே வெற்றியைத் தரும் என்றும் அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ் கூறினார்.
உற்பத்தி, எரிசக்தி, அதிநவீனத் தொழில்நுட்பம், ராணுவத் துறைகளில் இந்தியாவும் அமெரிக்காவும் வேகம் காட்டத் தவறும் பட்சத்தில், அது உலக அளவில் பல்வேறு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்தியாவுடன் இணைந்து எதிர்காலத்தை கட்டமைக்க அமெரிக்கா விரும்புவதாக துணை அதிபர் கூறினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய - அமெரிக்க மன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோதே ஜேடி வான்ஸ் இவ்வாறு குறிப்பிட்டார்.
“இந்த 21ஆம் நுாற்றாண்டின் எதிர்காலம் அமெரிக்கா - இந்திய கூட்டுறவின் வலிமையால் தீர்மானிக்கப்படும் என நம்புகிறேன். இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டால், 21ஆம் நுாற்றாண்டு வளமாகவும் அமைதியுடனும் இருக்கும். தவறினால், 21ஆம் நுாற்றாண்டு மனிதகுலத்திற்கே இருண்ட காலமாக அமையும்,” எனத் துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள கணிசமான இயற்கை வளங்கள், கடல்சார் இயற்கை எரிவாயு மற்றும் கனிமவளங்களின் இருப்பு குறித்து ஆராயும் நடவடிக்கைகளில் உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாக திரு வான்ஸ் கூறினார்.
இந்திய சந்தையில் சில அமெரிக்க இறக்குமதிப் பொருள்களுக்கு வரி விதிப்பதைக் கைவிடுவது குறித்து இந்தியா பரிசீலிக்க வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் அமெரிக்காவை நிர்வகித்தவர்கள், இந்தியாவை அணுகிய விதம் இப்போது மாறிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், இப்போது அமெரிக்கா இஅத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“அமெரிக்காவிடம் இருந்து நிறைய ராணுவக் கருவிகளை இந்தியா வாங்க வேண்டும் என விரும்புகிறோம். அவை தரத்தில் முதன்மையானவை.
“எங்களின் ஐந்தாம் தலைமுறை, ‘எஃப்-35’ போர் விமானங்கள் வாயிலாக இந்திய வான்பரப்பை, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய விமானப்படை பாதுகாக்க முடியும்.
“வேறு எந்த நாட்டையும்விட இந்தியாவுடன்தான் அதிக அளவிலான ராணுவப் பயிற்சியை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது,” என்றும் ஜேடி வான்ஸ் மேலும் தெரிவித்தார்.

