கொல்லம்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணம் பெற்றுக்கொண்டு, இளையர் ஒருவரை ஏமாற்றி கம்போடியாவிற்குக் கடத்திய 31 வயதுப் பெண்ணை இந்தியாவின் கேரள மாநிலக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
கொல்லம் மாவட்டம், தாழவா பகுதியைச் சேர்ந்தவர் கனீஷ். வேலைக்காக இணையம் வழியாக அவரை நேர்காணல் செய்தார் நிலம்பூரைச் சேர்ந்த சஃப்னா. பின்னர் கனீஷிடம் ரூ.120,000 பெற்றுக்கொண்ட சஃப்னா, அவருக்குத் தாய்லாந்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்தார் என்று காவல்துறை தெரிவித்தது.
சஃப்னாவால் அமர்த்தப்பட்ட முகவர்கள் கனீஷைத் தாய்லாந்திற்கு அழைத்துச் சென்று, பின்னர் அவரை அங்கிருந்து கம்போடியாவிற்குக் கடத்தினர்.
கம்போடியாவில் இணைய மோசடிக் கும்பலிடம் சிக்கிய கனீஷ், இணையம் வழியாகப் பிறரை ஏமாற்றும் பணியில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். தமக்கு வகுக்கப்பட்ட இலக்குகளை எட்டத் தவறும்போதெல்லாம், கனீஷ் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கொடுமைப்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, கனீஷைப் பாதுகாப்பாக இந்தியாவிற்கு மீட்டுக்கொண்டுவர வேண்டுமெனில் மேலும் ஒன்றரை லட்ச ரூபாய் தரவேண்டும் என அவருடைய உறவினர்களிடம் சஃப்னா கேட்டதாகக் கூறப்பட்டது. அப்படியும் அவர் கனீஷை மீட்டுவரத் தவறியதால், கனீஷின் குடும்பத்தினர் சஃப்னாமீது இந்தியத் தூதரகத்திடம் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, கம்போடிய மோசடிக் கும்பலிடமிருந்து கனீஷ் மீட்கப்பட்டார்.
காவல்துறையிடமும் கனீஷின் குடும்பத்தினர் புகாரளிக்க, சஃப்னா கைதுசெய்யப்பட்டார். அவர் இதேபோன்று வேறு எவரையேனும் ஏமாற்றினாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சஃப்னா, தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

