இதய அறுவை சிகிச்சை செய்த ‘போலி’ மருத்துவர்: ஒரே மாதத்தில் ஏழு பேர் மரணம்

2 mins read
16a4b1ed-c574-4185-816b-76c018901882
மருத்துவமனை ஒன்றில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. - படம்: பிக்சாபே

தாமோ: மத்தியப் பிரதேச மாநிலத்தின் தாமோ நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய போலி மருத்துவர் ஒருவர், நோயாளிகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ததில் குறைந்தது ஏழு பேர் இறந்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மத்தியப் பிரதேச மாவட்ட அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்த நோயாளிகளில் ஏழு பேர் ஒரு மாதத்திற்குள் இறந்துவிட்டதாக வெளியான தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

என் ஜான் கெம் என்ற அந்த ஆடவர், அதே பெயரைக் கொண்ட ஒரு பிரபல பிரிட்டிஷ் மருத்துவரைப் போல் ஆள்மாறாட்டம் செய்து, கிறிஸ்தவ மிஷனரி மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவரின் உண்மையான பெயர் நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் என்பது தெரியவந்தது.

முன்னதாக, குழந்தைகள் நலக் குழுவின் வழக்கறிஞரும் மாவட்டத் தலைவருமான தீபக் திவாரி, நோயாளிகளின் அதிகாரபூர்வ இறப்பு எண்ணிக்கை ஏழாக இருந்தாலும், உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாகக் கூறினார். இந்த வழக்கறிஞர் முன்னதாக தாமோ மாவட்ட நீதிபதியிடம் புகார் அளித்திருந்தார்.

பல்வேறு தரப்பினரும் கூறிய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மாவட்ட புலனாய்வுக் குழுவினர் மருத்துவமனையில் இருந்து அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றினர்.

விசாரணையின்போது, ​​பிரபல பிரிட்டிஷ் மருத்துவரைப் போன்ற போலி ஆவணங்களை ஆள்மாறாட்டம் செய்தவர் தாக்கல் செய்திருப்பது தெரியவந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்மீது ஹைதராபாத்தில் ஒரு குற்றவியல் வழக்கு உள்ளது. மேலும், அவர் தனது உண்மையான ஆவணங்களைக் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.

தாமோ மாவட்ட காவல் ஆய்வாளர் அபிஷேக் திவாரி ஏஎன்ஐ ஊடகத்திடம் பேசியபோது, “மிஷனரி மருத்துவமனையில் பல இறப்புச் சம்பவங்கள் நடந்தது தொடர்பாக நாங்கள் தற்போது விசாரித்து வருகிறோம்,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்