மும்பை: ஆசியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகளின் அதிகரித்துவரும் அழுத்தத்தைப் பிரதிபலிக்கும் வகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 88.44 ஆக வியாழக்கிழமை (செப்டம்பர் 11) இதுவரை இல்லாத அளவுக்குச் சரிந்தது. கடந்த வெள்ளிக்கிழமை முன் எப்போதும் இல்லாத வகையில் 88.36 என்ற சரிவை அது கடந்தது.
கடந்த மாதம் இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்கா வரி விதித்ததிலிருந்து நாணய மதிப்புச் சரிவு தொடங்கியது. ஆசிய நாணயங்களில் அதிக எளிதில் பாதிக்கப்படும் நாணயமாக இந்திய ரூபாய் உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை இந்தியக் கடன், பங்குச்சந்தைகளில் இருந்து 11.7 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் வரி விதிப்பு இந்தியாவின் வளர்ச்சியையும் வர்த்தக எதிர்கால வாய்ப்புகளையும் பாதித்துள்ளது.
இதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வரிக் குறைப்பை அறிமுகப்படுத்தியுள்ளார். வர்த்தகத் தடைகளுக்குத் தீர்வு காண தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதையும் இரு நாடுகளும் ஆராய்ந்தன.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் வேகத்தைத் தணிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி அடிக்கடி நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரிய சரிவுகளைத் தடுப்பதற்கு மத்திய வங்கி டாலர்களை விற்பனை செய்து வருவதாகச் சந்தைப் பங்கேற்பாளர்கள் கூறுகின்றனர்.