மீரட்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் பூட்டப்பட்ட வீடு ஒன்றினுள் ஐந்து சடலங்களை காவல்துறை கைப்பற்றி உள்ளது.
அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் என்று மீரட் வட்டார காவல்துறை துணை கண்காணிப்பாளர் விபின் தடா கூறினார்.
ஐந்து சடலங்களின் தலையிலும் காயங்கள் இருந்ததாகவும் கனமான பொருளால் ஐவரின் தலையும் தாக்கப்பட்டு இருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
மீரட் நகரின் லிசாரி கேட் வட்டாரத்தில் உள்ள வீடு ஒன்றில் வழக்கத்திற்கு மாறான சம்பவம் காணப்படுவதாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் காவல்துறையிடம் வியாழக்கிழமை (ஜனவரி 9) இரவு தெரிவித்தனர்.
விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள், புகாரில் தெரிவிக்கப்பட்ட வீடு வெளியில் இருந்து பூட்டப்பட்டு இருப்பதை அறிந்தனர்.
அதனால், வீட்டின் கூரை வழியாக அவர்கள் நுழைந்தனர். அப்போது ஆண், பெண், இரண்டு குழந்தைகளின் ஒரு வயதுக் குழந்தையின் உடல், படுக்கைக்குக் கீழ் உள்ள பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டும் இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
வீடு முழுவதும் அலங்கோலமாகக் காட்சியளித்தது.
பின்னர் ஐவரின் அடையாளங்களையும் அதிகாரிகள் வெளியிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
வாகனப் பழுதுபார்க்கும் வேலை செய்த மொயின், அவரது மனைவி அஸ்மா, அவர்களின் மகள்கள் அஃப்சா, 8, அஸிஸா, 4, அதிபா, 1, ஆகியோர் மாண்டவர்கள்.
புதன்கிழமை மாலையில் இருந்தே அந்தக் குடும்பத்தினரின் நடமாட்டம் இல்லை என்று அக்கம்பக்கத்தினர் காவல்துறையிடம் கூறினர்.
தடயவியல் நிபுணர்கள் சம்பவம் நிகழ்ந்த வீட்டில் சோதனை நடத்தினர்.
அந்தக் குடும்பத்தினருக்குத் தெரிந்த ஒருவரின் வேலையாக இருக்கலாம் என்றும் முன்விரோதம் காரணமாக ஒட்டுமொத்தக் குடும்பமும் தீர்த்துக் கட்டப்பட்டு இருக்கலாம் என்றும் காவல்துறை சந்தேகிக்கிறது.
“உடல் கூறாய்வுக்குப் பின்னரே ஐவரின் மரணத்திற்கான காரணம் தெளிவாகத் தெரிய வரும். தனிப்பட்ட விரோதம் காரணமாக ஐவரும் கொல்லப்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது,” என்று திரு விபின் தடா தெரிவித்தார்.