டெல்லி: விவசாயி ஜகஜீத் சிங் தலேவாலுக்கு ஆதரவாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்திய விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அரியானா மாநில எல்லையில் 35வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் ஜகஜீத் சிங்குக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் விவசாயிகள் இந்த முழு அடைப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
போராட்டத்தால் 150க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் வாகனங்களை மறித்து போராட்டம் நடத்தியதால் சாலைப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
விவசாயிகளின் இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் பிரச்சினைகள் ஏதும் நடக்காத வகையில் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பஞ்சாப்-அரியானா எல்லையிலும் ஏராளமான விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் வகையிலான சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
இதனால் விவசாயிகள் மீண்டும் டெல்லியை முற்றுகையிட முயன்றனர். ஆனால் விவசாயிகள் ஹரியானாவின் ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அதனால் அங்கேயே விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயி ஜகஜீத் சிங்கை மருத்துவமனையில் அனுமதிக்க உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் பஞ்சாப் அரசு மீதும், ஜகஜீத் சிங்கை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவிடாமல் தடுக்கும் பிற விவசாயிகள் மீதும் உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
செவ்வாய்க்கிழமைக்குள் (டிசம்பர் 31) அவரை மருத்துவமனையில் அனுமதிக்க பஞ்சாப் அரசுக்கு கெடு விதித்துள்ளது நீதிமன்றம். தேவைப்பட்டால் மத்திய அரசிடம் உதவியைக் கேட்கலாம் என்றும் பஞ்சாப் அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
இதற்கிடையே, ஜகஜீத் சிங்கை பஞ்சாப் அரசு அதிகாரிகள் சந்தித்துப் பேசியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.