பிப்ரவரி 12ல் விவசாயச் சங்கங்கள் நாடு தழுவிய போராட்டம்

பிப்ரவரி 12ல் விவசாயச் சங்கங்கள் நாடு தழுவிய போராட்டம்

2 mins read
அமெரிக்காவிடம் முற்றிலும் அடிபணிந்துவிட்டதாகச் சாடல்
aceaa6c6-6777-4bc1-89ac-875283c74d71
இந்தியா-அமெரிக்கா இடையிலான வணிக உடன்பாட்டை எதிர்த்து போராட்டத்தில் குதிக்கப் போவதாக இந்திய விவசாயச் சங்கங்கள் அறிவித்துள்ளன. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியா - அமெரிக்கா வணிக ஒப்பந்தத்தை எதிர்த்து, ஐக்கிய விவசாயிகள் முன்னணி (எஸ்கேஎம்), அனைத்திந்திய விவசாயிகள் சங்கம் (ஏஐகேஎஸ்) உள்ளிட்ட இந்திய விவசாயச் சங்கங்கள் பிப்ரவரி 12ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.

இந்தியா-அமெரிக்கா இடைக்கால வணிக உடன்பாடானது, அமெரிக்கப் பன்னாட்டுப் பெருநிறுவனங்களிடம் இந்திய வேளாண்மை ‘முற்றிலும் அடிபணிந்துவிட்டதற்கு’ ஒப்பானது என்று எஸ்கேஎம் அமைப்பு சனிக்கிழமை (பிப்ரவரி 7) ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்தது.

இந்திய வணிக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உடனடியாகப் பதவி விலகவேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவிலுள்ள சிற்றூர்களில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அப்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இருவரின் உருவப் பொம்மைகளும் எரிக்கப்படும் என்றும் செய்தியாளர்களிடம் எஸ்கேஎம் தலைவர்கள் கூறினர்.

பிப்ரவரி 12ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள பொது வேலைநிறுத்தத்திற்கும் ஆதரவளிப்போம் என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

தானியங்கள், விலங்குணவு, சோயாபீன் எண்ணெய் போன்ற பொருள்களுக்குச் சந்தையைத் திறந்துவிடுவது இந்திய வேளாண்மையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஏஐகேஎஸ் தலைவர் கிருஷ்ண பிரசாத் குறிப்பிட்டார். அது பால்பொருள்கள் துறையையும் பாதிக்கக்கூடும் என்று அவர் சொன்னார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வணிக ஒப்பந்தங்கள், அந்த வட்டாரங்களின் பொருளியலுக்குப் பயன்தரும் நோக்கத்தில் அமைந்தவை என்றும் அவற்றால் இந்தியாவிற்குப் பயனில்லை என்றும் அவர் கூறினார்.

குறைந்த வருமானத்தாலும் கடனாலும் ஏற்கெனவே தத்தளித்துவரும் விவசாயிகளின் நிலைமை இந்த உடன்பாடுகளால் மேலும் மோசமடையும் என்று பஞ்சாப்பின் கிரந்திகாரி விவசாயிகள் சங்கத் தலைவர் தர்ஷன் பால் கவலை தெரிவித்தார்.

இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் அனைவரும் பங்கேற்க வேண்டுமென பாரதிய விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திக்கைத் அறைகூவல் விடுத்துள்ளார்.

பெரும்போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை

இதனிடையே, இந்தியா - அமெரிக்கா இடையிலான தடையற்ற வணிக உடன்பாட்டில் கையெழுத்திடுவதைப் பிரதமர் மோடி தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள எஸ்கேஎம், இல்லையேல் இந்திய அளவில் பெரும்போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் நெருக்குதலை அடுத்து, அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியா தனது சந்தையைத் திறந்துவிட ஒப்புக்கொண்டுள்ளதாக விவசாயிகள் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் சாடினார். அதனால், இந்திய விவசாயிகளுக்குக் கடுமையான இழப்புகள் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இடைக்கால வணிக உடன்பாட்டை எட்டியுள்ளதாக இந்தியாவும் அமெரிக்காவும் அண்மையில் அறிவித்திருந்தன. அதன்படி, இந்தியப் பொருள்களுக்கான வரியை அமெரிக்கா 50 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகக் குறைக்கும். பதிலுக்கு அமெரிக்கப் பொருள்களுக்கான இறக்குமதி வரியை இந்தியா முற்றிலுமாக நீக்கும் அல்லது குறைக்கும்.

மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருள்களை வாங்க நோக்கம் கொண்டுள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இந்திய வணிகர் சங்கக் கூட்டமைப்பும் பல்வேறு சங்கங்களும் பிப்ரவரி 12ஆம் தேதி பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்