லக்னோ: புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நொய்டா அனைத்துலக விமான நிலையம் தனது முதலாவது வணிகரீதியான விமானச் சேவையை திங்கட்கிழமை (ஜூன் 15) தொடங்கியது.
அந்தத் தொடக்க விழாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, விமான நிலையக் கட்டுமானத்திற்காகத் தங்களின் நிலங்களை வழங்கிய ஜேவர் பகுதி விவசாயிகள் 170 பேர் அந்த முதல் விமானத்தில் லக்னோவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் தீரேந்திர சிங் தலைமையிலான அந்த விவசாயிகள் குழு, லக்னோவில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்துப் பேச சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, மத்திய பொது விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு அந்த விவசாயிகளுடன் கலந்துரையாடினார். ஜேவர் பகுதியை ஒரு முக்கிய விமானப் போக்குவரத்து மையமாக மாற்றுவதில் அவர்களின் பங்களிப்பை அமைச்சர் பாராட்டினார்.
“இந்த விமான நிலையம் உள்நாட்டு, அனைத்துலகச் செயல்பாடுகளுக்கான மையமாக விளங்கும். இது முழுமையாக நிறைவடையும்போது ஆசியாவின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றாக மாறும்,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், முதற்கட்டமாக ஆண்டுக்கு 12 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன்கொண்ட நொய்டா விமான நிலையம், நான்காம் கட்ட விரிவாக்கத்தின்போது ஆண்டுக்கு 70 மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் மேம்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
லக்னோவைத் தவிர பெங்களூரு உள்ளிட்ட மேலும் மூன்று நகரங்களுக்கான விமானச் சேவைகளும் நொய்டா விமான நிலையத்திலிருந்து தொடங்கப்பட்டுள்ளன.

