புதுடெல்லி: ஜூன் மாதம் 260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்து சுயாதீன விசாரணைக்கு உத்தரவிடுமாறு இந்திய உச்ச நீதிமன்றத்தை விமானியின் 91 வயது தந்தை திரு புஷ்கர் ராஜ் சபர்வால் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜூன் 12ஆம் தேதி, அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் AI 171, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விமான விபத்து குறித்து இந்திய விமான விபத்து புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த விமானி சுமித் சபர்வாலின் தந்தை, இந்திய விமானிகள் கூட்டமைப்புடன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அரசாங்க விசாரணையை விமர்சித்த அவர், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நிபுணர்கள் குழுவால் விசாரணை நடத்த வேண்டும் என்று அதில் கோரியுள்ளார். தன்னைச் சந்தித்த புலனாய்வுத்துறையின் இரு அதிகாரிகள், தனது மகன் திரு சுமீத் சபர்வால், விமானம் புறப்பட்ட பிறகு விமானத்தின் எஞ்சினுக்குச் செல்லும் எரிபொருளை வேண்டுமென்ற நிறுத்தியதாகக் குறிப்பிட்டதாகக் கூறினார்.
அரசாங்கம் அத்தகைய குற்றச்சாட்டுகளை மறுத்து, விசாரணை "மிகவும் நேர்மையானது, முழுமையானது," என்று கூறியுள்ளது. விபத்து குறித்த ஏஏஐபியின் முதற்கட்ட அறிக்கை பாரபட்சமாகவும் குறைபாடுகளுடனும் உள்ளது என்றும் எனவே, விமான விபத்து குறித்த அதன் விசாரணையை முடித்து வைக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்