காவல்துறைப் பயிற்சிக்கழகத்தில் பாலியல் துன்புறுத்தல்: பெண் அதிகாரி புகார்

காவல்துறைப் பயிற்சிக்கழகத்தில் பாலியல் துன்புறுத்தல்: பெண் அதிகாரி புகார்

1 mins read
36ac1be2-98a3-4d5d-9e34-36f08ee365bb
மூத்த அதிகாரிக்கு எதிராகப் பயிற்சிக்கழகத்தில் பயிலும் பெண் அதிகாரி புகார் அளித்துள்ளார். - படம்: இணையம்

திரிச்சூர்: ராமவர்மபுரத்தில் உள்ள கேரளக் காவல்துறைப் பயிற்சிக்கழகத்தில் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக மூத்த அதிகாரிக்கு எதிராகப் பெண் காவல் அதிகாரி ஒருவர் புகார் அளித்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவர் ஓர் அலுவலகத் தளபதி என்று கூறப்படுகிறது.

சில ஆவணங்களைப் பிரதி எடுக்க வேண்டும் என மே 17ஆம் தேதி தன் அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட பெண்ணை வரச் சொன்ன அந்த மூத்த அதிகாரி, பின்னர் அவரைப் பிடித்து இழுத்து பாலியல் ரீதியான துன்புறுத்தல் இழைத்ததாக நம்பப்படுகிறது.

இரண்டு நாள்கள் கழித்து மீண்டும் அதேபோல் நடந்ததாகக் கூறப்படுகிறது.

தனக்கு நேர்ந்த துன்புறுத்தல் குறித்து தலைமை கான்ஸ்டபிள் பொறுப்பில் உள்ள அந்தப் பாதிக்கப்பட்ட பெண், பயிற்சிக்கழகத்தின் நிர்வாகியிடம் புகாரளித்தார்.

மூத்த அதிகாரிக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வன்மையாகக் கோரிய அந்தப் பெண், தனது மனநலம் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதால் பயிற்சிக்கழகத்தில் தொடர முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, பெண்ணின் புகார் உள்ளூர் காவல்நிலையத்தை இன்னும் சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து தாங்கள் பயிற்சிக்கழகத்திலேயே விசாரணை தொடங்கியுள்ளதாகவும் அதன்வழி ஆதாரங்கள் கிடைத்தால் காவல் நிலையத்திற்குப் புகார் அனுப்பப்படும் என்றும் பயிற்சிக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்