பெங்களூரு: இந்தியாவின் முக்கியமான ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக விளங்கும் கர்நாடகாவின் தர்மஸ்தலாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் புதைக்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை கர்நாடக அரசு அமைத்துள்ளது.
கடந்த 1995 முதல் 2014 வரை நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் கொன்று புதைக்கப்பட்டிருப்பதாக தர்மஸ்தலா கோவிலில் பணியாற்றிய முன்னாள் துப்புறவு தொழிலாளி ஒருவர் புகைப்பட ஆதாரங்களுடன் புகார் அளித்தது ஒட்டுமொத்த நாட்டையே அதிர வைத்தது.
அவ்வாறு கொடூரமாகக் கொன்று புதைக்கப்பட்ட பெண்களில் பள்ளிச் சிறுமிகளும் அடங்குவர் என்றும் பள்ளிச் சீருடையுடனும் புத்தகப் பையுடனும் குழந்தைகள் புதைக்கப்பட்டுள்ளனர் என்றும் துப்புரவுத் தொழிலாளி அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் தமது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
பெரும் விவாதத்தைக் கிளப்பிய இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த, டிஜிபி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக்குழுவை கர்நாடக அரசு அமைத்துள்ளது.
இந்த வழக்கை பாரபட்சம் இன்றி முறையாக விசாரிக்க வேண்டும் என மாநில மகளிர் ஆணையம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போதைய வழக்கு மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் இது தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளை விசாரிக்கவும் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ள கோவில் நிர்வாகம், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளதாகவும் பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.