போதைப்பொருளுடன் பிடிபட்ட மருத்துவமனை பெண் ‘சிஇஓ’ கைது

2 mins read
4317c753-b858-4bcf-bac4-972eba0c537f
 சிகுருபதி நம்ரதா. - படம்: ஊடகம்

ஹைதராபாத்: ஐந்து லட்சம் ரூபாய் ‘கொகைன்’ போதைப்பொருளுடன் பிடிபட்ட பிரபல தனியார் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரியும் இயக்குநருமான சிகுருபதி நம்ரதாவிடம் ஹைதராபாத் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அவர் மும்பையைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி பாலகிருஷ்ணா என்பவரிடம் இருந்து போதைப்பொருளை வாங்க முற்பட்டபோது வியாழக்கிழமை மாலை காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

பாலகிருஷ்ணாவும் பிடிபட்ட நிலையில், மூன்றாவது குற்றவாளியான வான்ஷ் தக்கர் தலைமறைவாகிவிட்டதாக காவல்துறை தெரிவித்தது.

தங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், மே 8ஆம் தேதியன்று ஷைக்பேட்டை பகுதியில் வைத்து நம்ரதாவையும் பாலகிருஷ்ணாவையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், இருவரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களே தந்துள்ளனர். எனினும், பாலகிருஷ்ணாவிடம் இருந்து தாம் 50 கிராம் ‘கொகைன்’ பெற்றதாக நம்ரதா ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

ஸ்பெயின் நாட்டில் பட்டமேற்படிப்பை மேற்கொண்டபோது தமக்கு கொகைன் பழக்கம் ஏற்பட்டதாகவும் கடந்த 2017ஆம் ஆண்டு கொச்சியில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில் எம்டி முடித்த பிறகு, ஸ்பெயினுக்கு குடிபெயர்ந்தபோது மீண்டும் அங்கு போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்தியா திரும்பிய பிறகு, தம்மால் அப்பழக்கத்தைக் கைவிட முடியவில்லை என அவர் ஒப்புக்கொண்டதாகக் காவல்துறை கூறியது.

“வான்ஷ் தக்கர் என்பவர்தான் போதைப்பொருள்களை வாங்கித் தருவார். தேவைப்படும் போதெல்லாம், நான் வான்ஷைத் தொடர்பு கொள்வேன். அவர் தாமே வருவார் அல்லது வேறு யார் மூலமாவது அனுப்புவார்.

“கடந்த மே 4 ஆம் தேதி, நான் வான்ஷுக்கு 50 கிராம் கொகைன் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பினேன். அவர் ‘குருவி’யாகச் செயல்படும் பாலகிருஷ்ணாவுக்கு ரூ.5 லட்சம் கொடுக்குமாறு அறிவுறுத்தினார்.

“மே 8ஆம் தேதி, போதைப்பொருள்களை முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில், பாலகிருஷ்ணா வழங்கியபோது காவல்துறை இருவரையும் கைது செய்தது,” என நம்ரதா வாக்குமூலம் அளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்