தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐந்தாம் தலைமுறை போர் விமானம்: ரூ.15,000 கோடி ஒதுக்கும் இந்தியா

2 mins read
2dd74c10-3335-46f4-ad44-25841b63d6da
மேம்பட்ட நடுத்தர போர் விமானத்தின் மாதிரி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

புதுடெல்லி: எதிர்வரும் 2035ஆம் ஆண்டுக்குள், ஐந்தாம் தலைமுறை போர் விமானம் பயன்பாட்டுக்கு வரும் என பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு (DRDO) தெரிவித்துள்ளது.

இதற்கான ஒப்புதல் 2024ம் ஆண்டு நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலேயே வழங்கப்பட்டுவிட்டதாக அந்த அமைப்பின் தலைவர் சமீர் வி காமத் கூறியுள்ளார்.

ஐந்தாம் தலைமுறை விமானங்களைப் பயன்பாட்டுக் கொண்டுவர பத்து ஆண்டுகள் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.

“நான்காம் தலைமுறை ‘இன்ஜின்’கள் மூலம் பல முக்கியமான தகவல்களைப் பெற்றுள்ளோம். பல நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டுள்ளோம்.

“எங்களுடைய அடுத்த இலக்கு ஆறாம் தலைமை விமானங்கள்தான்,” என்று சமீர் வி காமத் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களைத் தனியார் பங்களிப்புடன் உருவாக்க மத்திய தற்காப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புத் திறனை மேம்படுத்தவும் வலுவான உள்நாட்டு, விண்வெளி, தொழில்துறையை வளர்க்கும் விதமாகவும் தற்காப்புத்துறை இந்த முடிவை எடுத்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய திட்டத்தின்கீழ், தனியாரும் இந்திய விமான மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட முடியும்.

தனியார் நிறுவனங்கள், சுயாதீனமாகவோ அல்லது கூட்டு முயற்சியாகவோ இந்த திட்டத்திற்கான ஏலத்தில் பங்கேற்கலாம். எனினும், இந்திய அரசின் சட்டங்கள், விதிமுறைகளுக்குட்பட்டு இயங்கும் இந்திய நிறுவனமாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்று தற்காப்புத்துறை தெரிவித்துள்ளது.

இந்திய விமானப்படைக்காக ஒரு பெரிய உள்நாட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கு, தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தார்.

இந்தத் திட்டத்தின் தொடக்க மேம்பாட்டுச் செலவு கிட்டத்தட்ட ரூ.15,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், இதுபோன்ற ஸ்டெல்த் போர் விமானங்களை வைத்திருக்கும் மூன்றாவது நாடாக இந்தியா மாறும்.

தற்போது, ​​அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே ஐந்தாம் தலைமுறை ‘ஸ்டெல்த்’ போர் விமானங்களை வைத்துள்ளன.

இந்தியாவும் சாதிக்கும் பட்சத்தில், இத்தகைய ராணுவ பலம் கொண்ட மூன்றாவது நாடாக உருவெடுக்கும்.

சீனா ஏற்கெனவே ஆறாம் தலைமுறை ஜெட் விமானத்தை உருவாக்கி வரும் நிலையில், இந்தியாவின் வான்படை ஆற்றலை மேம்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக நிபுணர்கள் கூறிவருகின்றனர்.

இந்தியாவின் பல்வேறு துறைகளுக்கு இத்திட்டம் உந்துதலாக இருக்கும் என தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாக இந்தியாவின் தற்காப்பு அமைச்சு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்