தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கான போராட்டம்: ராகுல்

2 mins read
f33ac9e4-8e84-406a-bb3e-0c6e5f84acd2
பேரணியில் பங்கேற்ற ராகுல் காந்தி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்தக் கோரியும் பீகார் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறியும் நாடாளுமன்ற எதிர்க்கட்சிகள் டெல்லியில் நேற்று (ஆகஸ்ட் 11) பேரணி நடத்தின.

இதில் ராகுல் காந்தி உட்பட, எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இண்டியா கூட்டணியின் தலைவர்கள் கலந்துகொண்டு, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.

எனினும், அவர்களை இடையில் வழிமறித்து டெல்லி காவல்துறை தடுத்து நிறுத்தியது.

அப்போது பேசிய அவர், அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராடி வருவதாக அவர் கூறினார். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் வாக்குத்திருட்டு நடப்பதாக ராகுல் காந்தி ஏற்கெனவே சாடியிருந்தார்.

பீகார் உட்பட பல்வேறு மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக இந்திய எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.

இந்நிலையில், பீகார் வாக்காளர் பட்டியலில் ‘சிறப்புத் தீவிர திருத்த’ நடவடிக்கையின் மூலம் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திங்கள்கிழமை (ஆகஸ்ட் 11) பேரணியின்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையினர் அமைத்த தடுப்பரண்களை அகற்ற முயன்ற இண்டியா கூட்டணி எம்பிக்கள், ஒரு கட்டத்தில் அவற்றை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது, சமாஜ்வாடி கட்சித் தலைவர் தடுப்பரணங்களைத் தாண்டி குதிக்க முயன்றார்.

கைதான போதும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அப்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்பி மிதாலி பாக் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பேரணியின்போது பேசிய காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ், தங்களுடைய கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்திருப்பதாகக் கூறினார். மேலும், பேரணியை அமைதியாக நடத்துவதே தங்கள் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பீகார் வாக்காளர் பட்டியலில் ‘சிறப்புத் தீவிர திருத்த’ நடவடிக்கை, மற்ற பிரச்சினைகள் குறித்த தேர்தல் ஆணையத்திடம் குறிப்பாணை வழங்க விரும்புவதாகக் குறிப்பிட்ட ஜெராம் ரமேஷ், அதற்குக்கூட எதிர்க்கட்சியினருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றார்.

இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்கு முன்னால் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, நாட்டு மக்களின் முன் உண்மை வைக்கப்பட்டுள்ளது என்றும் அதை மீறி பாஜகவால் எதுவும் பேச முடியாது என்றும் கூறினார்.

“இந்தப் போராட்டம் அரசியல் சார்ந்தது அல்ல. மாறாக, அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கான போராட்டம். இது ஒரு மனிதன், அவரது வாக்கு தொடர்பானது.

“முறைகேடுகள் இல்லாத தூய்மையான வாக்காளர் பட்டியல்தான் எங்களுக்கு வேண்டும்,” என்றார் ராகுல் காந்தி.

குறிப்புச் சொற்கள்