ஆந்திராவில் ரூ.16,000 கோடியில் போா் விமானத் தயாரிப்பு ஆலை

பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு, ஏற்றுமதியில் இந்தியாவின் வளர்ச்சி

ஆந்திராவில் ரூ.16,000 கோடியில் போா் விமானத் தயாரிப்பு ஆலை

2 mins read
04c8ee19-8a25-4803-925e-335220832288
ஆந்திராவில் ரூ.16,000 கோடி மதிப்பிலான 5ஆம் தலைமுறை இலகுரக போா் விமானம் தயாரிக்கும் ஆலைக்கு இந்தியப் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், ஆந்திர மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு இருவரும் வெள்ளிக்கிழமை (மே 15) அடிக்கல் நாட்டினா். - படம்: தி இந்து
multi-img1 of 4

ஆந்திரா: ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்ய சாய் மாவட்டம் புட்டபர்த்தியில் ரூ.16,000 கோடி மதிப்பிலான 5ஆம் தலைமுறை இலகுரக போர் விமானத் தயாரிப்பு ஆலை அமைக்கப்படவுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு முகமையின் (டிஆர்டிஓ) கிளை அமைப்பான விமான மேம்பாட்டு அமைப்பால் (ஏடிஏ) இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இங்கு போர் விமானக் கட்டமைப்புத் தளமும் நவீன விமான பரிசோதனை மையமும் அமையவுள்ளன. இதுபோன்ற வசதிகள், உலகின் சில நாடுகளில் மட்டுமே தற்போது உள்ளன.

மேலும், பாரத் டைனாமிக்ஸ் நிறுவனம் ரூ.480 கோடியில் நீருக்கடியில் தாக்கும் டார்பீடோ அமைப்புகளையும், அக்னியஸ்த்ரா நிறுவனம் ரூ.1,500 கோடியில் நவீன ஆயுதங்களையும் இங்கு தயாரிக்கவுள்ளன.

ஆலைக்கு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் வெள்ளிக்கிழமை (மே 15) அடிக்கல் நாட்டினர்.

“இந்திய பாதுகாப்புத் துறை வரலாற்றிலும் புதிய சகாப்தம் எழுதப்பட்டுள்ளது. இன்றைய அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி மூலம் 4 முக்கியத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன,” என்று நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

கர்னூலில் எட்டு நிறுவனங்கள் இணைந்து ‘ட்ரோன் நகரம்’ அமைக்கின்றன. பெங்களூரு சிலிகான் பள்ளத்தாக்காக இருப்பது போல, கர்னூல் உலகின் ஆளில்லா வானூர்தி மையமாக மாறும்.

இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.46,000 கோடியிலிருந்து ரூ.1.54 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஏற்றுமதி ரூ.600 கோடியிலிருந்து ரூ.40,000 கோடியாக அதிகரித்துள்ளது என்று திரு ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

கர்னூலின் ஜோனாகிரி தங்கச் சுரங்கத்தில் விரைவில் தங்கம் தோண்டும் பணி தொடங்கப்பட்டு, முதல் ஆண்டில் 600 கிலோவும், இரண்டாம் ஆண்டில் 1,500 கிலோவும் தங்கம் எடுக்கப்படும். இதன்மூலம் ஆந்திரா தங்கத் தயாரிப்பு மையமாக மாறி இந்திய பொருளியலுக்கு உதவும் என்று தொடர்ந்து பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.

குறிப்புச் சொற்கள்