பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை (எஸ்ஐஆர்) நிறைவடைந்ததை அடுத்து, அம்மாநிலத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியலை இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
அந்நடவடிக்கையின் முடிவில், ஒட்டுமொத்தமாக ஏறக்குறைய ஒரு கோடி வாக்காளர்களின் (99.32 லட்சம்) பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. போலிப் பதிவுகள், முகவரி மாறியவர்கள், மரணமடைந்தவர்களின் பெயர்களை நீக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பட்டியலின்படி தற்போதைய மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4.55 கோடியாக உள்ளது.
கடந்த ஜூன் 30ஆம் தேதி கர்நாடகாவில் ‘எஸ்ஐஆர்’ பணி தொடங்கப்பட்டபோது, வாக்காளர் பட்டியலில் மொத்தம் 5.54 கோடி பெயர்கள் இடம்பெற்றிருந்தன. பின்னர் ஆகஸ்ட் 24 அன்று வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 4.46 கோடியாகக் குறைந்திருந்தது. வரைவுப் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களில் சுமார் 43.8 லட்சம் பேருக்கு உரிய விளக்கங்கள், ஆவணங்களைக் கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
விடுபட்ட தகுதியான வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் தங்களின் பெயர்களைச் சேர்க்க வழங்கப்பட்ட அவகாசத்திற்குப் பிறகு, தற்போது இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநில எதிர்க்கட்சிகள் லட்சக்கணக்கானோரின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
உயிரோடு இருப்பவர்களின் பெயர்களும் தகுதியான வாக்காளர்களின் பெயர்களும் தன்னிச்சையாக நீக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளன.
