பெங்களூரு: குடிநீரை வீணாக்கினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. குடிநீர் வீணாக்கப்படுவதைத் தடுக்க இத்தகைய நடவடிக்கைகள் அவசியமென அவ்வாரியம் கூறியது.
வாகனங்களைக் கழுவுதல், தோட்டம், கட்டுமானப் பணிகள், அலங்கார நீரூற்றுகள் ஆகியவற்றுக்காகக் குடிநீரைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ள அவ்வாரியம், அந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவித்துள்ளது.
திரையரங்க, வணிக வளாகங்களில் குடிநீர் வீணாக்கப்படுவதாகவும் சாலைக் கட்டுமானம், சுத்தம் செய்யும் பணிகளுக்குக் குடிநீரைப் பயன்படுத்தக் கூடாது என்றும் குடிநீர் வழங்கல் வாரியம் சுட்டிக்காட்டியுள்ளது.
சில விதிமுறைகளை மீறினால் முதன்முறை ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் மீண்டும் விதிமீறலில் ஈடுபட்டால் நாள்தோறும் கூடுதலாக ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அவ்வாரியம் எச்சரித்துள்ளது.
பெங்களூரில் நீச்சல் குளங்களை நிரப்புவதற்கும் பராமரிப்பதற்கும் குடிநீர் பயன்படுத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், அத்தகைய நடவடிக்கைகளுக்கும் குடிநீர் வழங்கல் வாரியத்தின் தடை உத்தரவு பொருந்தும் எனத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரில் குடிநீர்த் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலைமையைச் சமாளித்து வருகிறது குடிநீர் வழங்கல் வாரியம்.
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் எவ்வளவு குடிநீர் பயன்படுத்தப்படுகிறது என அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
பெங்களூரில் மழை இல்லாததால் பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள பெங்களூரு குடிநீர் வாரியம், நிரந்தரக் குடியிருப்பாளர்கள், தற்காலிகமாக வந்து செல்பவர்கள் உட்பட பெங்களூருவின் ஏறக்குறைய 1.4 கோடி மக்களுக்கும் சமமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று கூறியுள்ளது.

