புதுடெல்லி: தீ விபத்தில் சிக்கிய 11 பார்வையற்ற மாணவர்கள் உட்பட 13 பேரைக் காப்பாற்றிய டெல்லி காவல்துறையைச் சேர்ந்த தலைமைக் காவலருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
தன் உயிரைப் பணயம் வைத்த அமர்சிங் என்ற அந்த தலைமைக் காவலர் பலரைக் காப்பாற்றிய சம்பவம் கடந்த 18ஆம் தேதியே நிகழ்ந்தது என்றாலும் இந்திய ஊடகங்கள் இப்போதுதான் விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளன.
டெல்லியில் உள்ள புராரி பகுதியில் உள்ள தரோகா சந்தையில் ஒரு கட்டடத்தில் இருந்த பல கடைகள் திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
அப்போது அங்கு சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தார் தலைமைக் காவலர் அமர் சிங். அப்பகுதிவாசி ஒருவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.
கட்டடத்தின் தரைத்தளத்தில் இருந்த எட்டுக் கடைகளில் தீப்பிடித்ததில், தீப்பிழம்புகள் மேல் தளங்களில் உள்ள கடைகளையும் விழுங்கத் தொடங்கியதால் அமர்சிங், படிக்கட்டுகளைப் பயன்படுத்த முடியவில்லை. மேலே சிக்கிக் கொண்டவர்களும் கீழே வர முடியவில்லை.
“இரண்டாவது மாடியில் சிக்கிக்கொண்ட தம்பதியரைக் கண்ட அமர்சிங், அவ்வழியாகச் சென்ற ஒரு லாரியை நிறுத்தி, அதன் கூரையின் மீது ஏறி, பால்கனி (வீட்டு மாடம்) வழியாகப் பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடைந்தார்.
“அடர்த்தியான புகை, தீப்பிழம்புகள் காரணமாக கண்களுக்கு ஒன்றுமே புலப்படாத நிலையிலும், இருவரையும் ஒருவர்பின் ஒருவராகத் தன் தோள்களில் சுமந்து பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றார் அமர்சிங்.
“மேலும், தீப்பிடிக்கும் அபாயத்தில் இருந்த அருகிலுள்ள கட்டடம் ஒன்றில் பார்வைக் குறைபாடுள்ள மாணவர்கள் சிக்கியிருந்ததாகத் தகவல் கிடைக்க, உடனடியாக அங்கு சென்று, 11 மாணவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றினார்,” என்று காவல் உயர் அதிகாரிகள் சம்பவத்தை விவரித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
அனைவரையும் மீட்ட பிறகு புகையால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மயங்கி விழுந்துள்ளார் அமர்சிங். அவசரச் சேவைப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாக, தனி ஒருவராக அவர் பலரை மீட்டதைச் சமூக ஊடகங்களில் ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.

