புதுடெல்லி: ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு டெல்லியின் மால்வியா நகரில், ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக புதன்கிழமை (ஜூன் 3) காலை அவசர அழைப்பு வந்ததையடுத்து, டெல்லி தீயணைப்புச் சேவை வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கியதில் தீ மூண்ட கட்டடத்திலிருந்து 40 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
துணைக் கோட்ட நீதிபதியும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரியுமான ஜிதேந்திர குமார், தமக்குத் தகவல் கிடைத்த உடனேயே பேரிடர் மீட்புக் குழு களமிறக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரைக் கண்டறியப்படவில்லை என்றாலும் தீப்பற்றிய கட்டடத்தில் இயங்கிவரும் உணவகத்தில் இருந்துதான் தீ மூண்டிருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. மின்கசிவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இவ்விபத்தில் 21 பேர் உயிரிழந்துவிட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. மேலும், படுகாயம் அடைந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் பலர் வெளிநாட்டவர் என்று தெரியவந்துள்ளது.
விசாரணை நீடித்துவரும் நிலையில், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு டெல்லி முதல்வர் ரேகா குப்தா இரங்கல் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மீட்புக் குழுவினரின் விரைவான செயல்பாட்டால் பலர் மீட்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் ஆதரவும் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தவும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணங்களை உடனடியாக ஏற்படுத்தித் தரவும் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், தீ விபத்தின்போது கட்டடத்தின் மேல்தளத்திலிருந்து பெண்கள் இருவர் குதித்த காட்சிகள் அடங்கிய காணொளி இணையத்தில் வெளியானது.

