திருச்சூர்: கேரள மாநிலத்தின் திருச்சூர் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் பெரிய அளவில் தீச்சம்பவம் நிகழ்ந்தது.
ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4) காலை 6.15 மணிவாக்கில், இருசக்கர வாகனங்கள் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்தத் தீச்சம்பவம் நேர்ந்தது.
அதில் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாம்பலாகின. உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை.
தீச்சம்பவத்தின் போது பயணிகள் ரயில் ஏதும் ரயில் நிலையத்திற்கு வரவில்லை. அதனால் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
ரயில் நிலையத்தில் பின்வாசல் அருகில் அந்த இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைந்துள்ளது.
தொடக்கக்கட்ட விசாரணையில் அந்த இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் 600க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
முதலில் இரண்டு வாகனங்களில் தீ ஏற்பட்டதாகவும் பின்னர் அது மற்ற வாகனங்களுக்கு வேகமாகப் பரவியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இரண்டாம் நுழைவாயிலில் அமைந்துள்ள பயணச்சீட்டுகள் வழங்கும் நிலையமும் தீயால் கருகியது. அருகில் இருந்த மரமும் தீயால் பாதிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் விரைவாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர். தீயை அணைக்க அருகில் இருந்த மற்ற நகரத் தீயணைப்புப் படைகளும் உதவின. இதனால் ரயில் நிலையத்திற்கு வேறு எந்தப் பாதிப்பும் இல்லை.
தீ எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கேரள மாநிலத்தின் வருவாய்த்துறை அமைச்சர் கே ராஜன் தெரிவித்தார்.

