மும்பை: மகராஷ்டிரா மாநிலத்தின் மும்பை வட்டாரத்தில் உள்ள செம்பூர் பகுதியில் இருக்கும் குடியிருப்பு வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் எழுவர் மாண்டனர். ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) அதிகாலை இச்சம்பவம் நடந்தது.
செம்பூர் பகுதியில் இருக்கும் சித்தார்த் காலனியில் அமைந்துள்ள இரண்டடுக்கு கட்டடம் ஒன்றின் கீழ்தளத்தில் கடையும் மேல்தளத்தில் வீடும் அமைந்திருந்தது. இந்நிலையில், கடையில் மின் கசிவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை தீப்பற்றியது.
விரைவாக தீ மேல்தளத்திற்கும் பரவியதில் அங்கிருந்தவர்கள் தீயில் சிக்கிக்கொண்டனர்.
அதில் வீட்டிலிருந்த பாரிஸ் குப்தா(7), நரேந்திர குப்தா(10), விதி சேதிராம் குப்தா(15) ஆகிய மூன்று சிறார்கள் உள்பட எழுவர் உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் கடும் போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.