மும்பை மெட்ரோவுக்கான முதல் ஓட்டுநரில்லா ரயில் தயார்

மும்பை மெட்ரோவுக்கான முதல் ஓட்டுநரில்லா ரயில் தயார்

படம்: ஏஎன்ஐ காணொளி/மாத்ருபூமி ஊடகம்

31 Oct 2026 - 7:24 pm

1 mins read

ஸ்ரீசிட்டி: ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஸ்ரீசிட்டி உற்பத்தி ஆலையில் மும்பைப் பெருநகர விரைவுப் போக்குவரத்தின் 4, 4ஏ தடங்களுக்கான முதலாவது ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் தயாரிப்புப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

லார்சன் அண்ட் டூப்ரோ, ஆல்ஸ்டோம் ஆகிய நிறுவனங்களின் கூட்டு ஒப்பந்தத்தின்கீழ் 234 பெட்டிகள் கொண்ட 39 ரயில்கள் தயாரிக்கப்படவுள்ளன. இதில் நவீன தானியக்கச் சமிக்ஞை முறை, பணிமனைக்கான கருவிகள், ஐந்தாண்டு முழுப் பராமரிப்பு ஆகியவை அடங்கும்.

தானியக்கக் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பம் கொண்ட இந்த ரயில்கள், 90 நொடிகள் இடைவெளியில் இயக்கப்படக்கூடியவை. இந்த ரயில்கள் வடாலாவுக்கும் காசர்வடவலிக்கும் இடையே 35.3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 32 நிலையங்களை இணைக்கும் பசுமைப் பாதையில் இயக்கப்படும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிலோமீட்டர் ஆகும்.

திருப்பதி அருகேயுள்ள ஸ்ரீசிட்டியில் 14 மாதங்களில் இந்த ரயில் உருவானது. இதன் வடிவமைப்பு பெங்களூரிலும், சக்கரங்களும் இழுவை அமைப்புகளும் குஜராத்தின் சாவ்லி, தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களிலும் உருவாக்கப்பட்டன. இறுதி ஒருங்கிணைப்பு ஸ்ரீசிட்டியில் நடைபெற்றது.

சோதனை ஓட்டத்திற்காக இந்த ரயில் 2026 டிசம்பரில் மும்பை சென்றடையும். போக்குவரத்துச் சேவை 2027 ஜூலையில் தொடங்கும்.

பயணிகள் வசதிக்காகக் காற்றோட்டக் குளிர்விப்பு வசதி, சக்கர நாற்காலிப் பாதுகாப்புப் பகுதி, உட்புற மிதமான விளக்குகள், சைக்கிள் வைக்கும் வசதி ஆகியவை இதில் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்