புதுடெல்லி: கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள கிரேக்க உணவகத்தில் ராஜீவ் காந்தியைத் தற்செயலாகச் சந்தித்ததை சோனியா காந்தி நினைவுகூர்ந்துள்ளார்.
முதல் பார்வையிலேயே அவர்மீது தமக்கு ஈர்ப்பு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது நூலான ‘பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்’ நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது.
அப்புத்தகத்தின் முன்னோட்டக் காணொளியைத் தமது எக்ஸ் பக்கத்தில் சோனியா பகிர்ந்துள்ளார்.
“ராஜீவும் நானும் அன்பு, மகிழ்ச்சி, அற்புத நினைவுகள் நிறைந்த ஓர் உலகத்தை உருவாக்கினோம்,” என்று சோனியா கூறியுள்ளார்.
“நவம்பர் 10ஆம் தேதியன்று அந்த உலகத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கூடும் உணவகத்தில், பொது நண்பர் ஒருவர் மூலம் இருவரும் அறிமுகமாயினர். அப்போது இத்தாலிய உணவு கிடைக்கும் இடங்களை இங்கிலாந்தில் சோனியா தேடிக்கொண்டிருந்தார்.
“அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் உணவு மோசமாக இருக்கும். இப்போதுபோல் அதிக உணவகங்கள் அப்போதில்லை,” என்றார் சோனியா. ஆனால் அந்தச் சந்திப்பு வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் ஒன்றாக மாறியது.
“அவரை முதன்முதலில் சந்தித்தபோதே, அவருடன் காலம் முழுவதும் இணைந்திருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றியது,” என்றார் சோனியா.
“பின்னர், அவர் மனதிலும் அதே உணர்வுதான் உள்ளது என்பதை அறிந்தேன்,” என்றும் அவர் கூறினார்.
ராஜீவின் தோற்றத்தைவிட அவரது மென்மையான இயல்பே தம்மை ஈர்த்ததாக அவர் தெரிவித்தார்.
“அவர் மிகவும் மென்மையான தோற்றம் கொண்டவர்; நிச்சயமாக மிக அழகானவரும்கூட.
“ஆனால் அந்த மென்மைதான் என் மனத்தைத் தொட்டது,” என்று அவர் நினைவுகூர்கிறார்.
விருந்துகள், சுற்றுலாப் பயணங்கள் என அன்றாட அனுபவங்களை இருவரும் பகிர்ந்துகொண்டனர்.
இருவரும் 1968ல் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமராகப் பதவி வகித்தார். 1991ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது அவர் படுகொலை செய்யப்பட்டார்.
இத்தாலியில் பிறந்த சோனியா, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராக உயர்ந்தார்.
சில நாள்களுக்கு முன்பு இன்ஸ்டகிராமிலும் இணைந்த அவர், அதிலும் இந்நூல் குறித்துப் பகிர்ந்துள்ளார்.
