தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிசம்பரில் ‘ககன்யான்’ திட்டத்தின் முதல் சோதனை: இஸ்‌ரோ

1 mins read
dac2b998-cd92-483f-b9ed-3bee0b66bdf8
இஸ்ரோ தலைவர் நாராயணன். - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து இதுவரை, 34 நாடுகளின் 433 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் கீழ் முதல் சோதனை வரும் டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்படும் என்றும் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

‘ககன்யான்’ திட்டத்தை டிசம்பர் முதல் செயல்படுத்த தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இத்திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் நான்கு இந்தியர்களுக்கு அக்டோபர் மாதம் முதல் பயிற்சி தரப்படும் என்றார்.

அண்மையில், அனைத்துலக விண்வெளி மையத்துக்குச் சென்று திரும்பிய இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவும் இந்நால்வர் குழுவில் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தியா சார்பாக விண்வெளி மையத்தை நிறுவுவது, 2040க்குள் சந்திரனில் தரையிறங்குவது உள்ளிட்ட தொலைநோக்குத் திட்டங்களுக்கு இஸ்‌ரோவின் நடவடிக்கைகள் அடிப்படையாக அமையும்.

“கடந்த 10 ஆண்டுகளில், இந்திய விண்வெளி ஆய்வு முயற்சிகளின் முன்னேற்றம் அபரிமிதமானது. 2005 முதல் 2015ஆம் ஆண்டு வரை செய்த பணிகளைவிட 2015 முதல் 2025 வரை இஸ்ரோ கிட்டத்தட்ட இரண்டு மடங்கு பணிகளை முடித்து உள்ளது.

“கடந்த ஆறு மாதங்களில் மூன்று முக்கியமான பயணங்கள் முடிக்கப்பட்டன. அமெரிக்காவின் 6,500 கிலோ எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் இஸ்‌ரோ ஏற்பாட்டில் ஏவப்பட உள்ளது,” என்றார் நாராயணன்.

குறிப்புச் சொற்கள்