தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவில் முதல் முறை: தண்டவாளத்தில் சூரிய சக்தி தகடுகளைப் பொருத்தி மின் உற்பத்தி

1 mins read
243c2f00-4a5a-4723-88f0-f6e8b4365148
சூரிய சக்தி மின் உற்பத்தியில் தனியார் பங்களிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது. - கோப்புப்படம்: ஊடகம்

வாரணாசி: ரயில் தண்டவாளத்தில் சூரிய சக்தி தகடுகளை அமைத்து, மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை இந்திய ரயில்வே செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

நாட்டிலேயே முதல் முறையாக, வாரணாசி ரயில் பாதையில் 70 மீட்டர் துாரத்துக்கு தண்டவாளங்களில் சூரிய சக்தி தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்திய ரயில்வே துறை ஏற்கெனவே தனக்குச் சொந்தமான இடங்களில் சூரிய சக்தி, காற்றாலைகளை நிறுவியுள்ளது. இதன் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் பல்வேறு ரயில் நிலையங்களின் மேற்கூரைகளில் சூரிய சக்தி தகடுகள் பொருத்தப்பட்டு, மின்சாரம் உற்பத்தி செய்வதில் ரயில்வே துறையுடன் தனியார் நிறுவனங்களும் கைகோத்துள்ளன.

தற்போது தண்டவாளங்களில் சூரிய சக்தி தகடுகளைப் பொருத்தி, மின் உற்பத்தி செய்யும் முயற்சியிலும் தனியார் பங்களிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பனாரஸ் ரயில்வே ‘கோமோமோட்டிவ் ஒர்க்ஸ்’ சார்பில் 70 மீட்டர் தூரத்துக்கு 28 சூரிய சக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அமைப்பின் மூலம் 15 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், இந்த அமைப்பைத் தேவைக்கேற்ப அகற்றவோ மாற்றவோ வேண்டும் என்றும் இவற்றின் பராமரிப்புச் செலவு குறைவுதான் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டின் மின்தேவையை ஈடுசெய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அவற்றின் முதல் அங்கமாக, சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதை அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்காக உற்பத்தியாளர்களுக்கு மானியமும் வழங்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்