ஹைதராபாத்: உலகிலேயே முதன்முறையாக விமான ஓடுபாதையின் கீழே நிலத்தடிப் போக்குவரத்துச் சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது.
ஹைதராபாத்தில் உள்ள பேகம்பட் விமான நிலையத்தில் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
பேகம்பட் விமான நிலையம் கடந்த 1927ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. தற்போது அது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. பயணிகளுக்கான விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை.
தெலுங்கானா சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்குப் பதிலளித்த அவர், காற்று மாசு, மோசமான வடிகால் அமைப்புகள், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்கள் நாள்தோறும் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
இந்த நகரங்களைவிட ஹைதராபாத் பல வகையிலும் சிறந்து விளங்குவதாகவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஆகச்சிறந்த நகரமாக அது உருவெடுக்கும் என்றும் திரு ரேவந்த் ரெட்டி கூறினார்.
இல்லையெனில் ஹைதராபாத்தும் மற்ற நகரங்களைப்போல் எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் எச்சரித்தார்.
இதுபோன்ற நிலைமை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே பேகம்பட் விமான நிலைய ஓடுதளத்தின் கீழ் போக்குவரத்துக்கான சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், உலகின் எந்த விமான நிலையத்திலும் இதுபோன்ற பாதை அமைக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசு இதற்கான அனுமதியை வழங்கிவிட்டது என்றும் இந்தப் புதிய போக்குவரத்து சுரங்கப்பாதையின் மூலம் தெலுங்கானாவின் வடக்குப் பகுதியில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்களால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும் என்றும் முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஹைதராபாத் மெட்ரோ ரயில் சேவை தற்போது ‘எல்&டி’ நிறுவனத்தின் வசமுள்ளது. அதை ரூ.15,000 கோடி கொடுத்து கையகப்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதன் பிறகு 76 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில் பாதை விரிவாக்கம் செய்யப்படும் என்றார்.
அனைத்து நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவை உள்ளூர் விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் ஹைதராபாத்தில் அவ்வாறு இல்லாததால், அதை விமான நிலையத்துடன் இணைப்பது அவசியமாகிறது என்றும் தெரிவித்தார்.

