விசாகப்பட்டினம்: இந்திய ரயில்வே வரலாற்றிலேயே முதன்முறையாக பயணிகள் பாதுகாப்புக்கென இயந்திர மனிதன் (ரோபோ) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்புக்கு உதவவும் இதர சேவைகளை வழங்கவும் மனித வடிவிலான இந்த ரோபோ களமிறக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது, ரயில் நிலையத்தைச் சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இயந்திர மனிதனின் பங்களிப்பு முழுமையாக இருக்கும் என்றும், இந்த ‘ரோபோ’ முழுக்க முழுக்க விசாகப்பட்டினத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த இயந்திர மனிதனை உருவாக்க நிபுணர் குழு ஓராண்டுக்கும் மேலாக தீவிரமாகப் பணியாற்றியது என இந்திய ரயில்வே பாராட்டியுள்ளது.
மனித வடிவிலான இந்த ‘ரோபோ’ ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் தன்னிச்சையான பாதுகாப்பு, தகவல் அறிவிப்புகள் வழங்கும் என்பதுடன், கூட்ட நெரிசலின்போது பொதுமக்களைச் சரியான முறையில் வழிநடத்தும்.
இந்தச் செயல்பாடு குழப்பங்களைக் குறைக்கவும் பயணிகளிடையே விதிமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்த உதவும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
‘ஏஎஸ்சி அர்ஜுன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திர மனிதனால் பொதுமக்களுடன் சைகை மூலம் தொடர்புகொள்ள முடியும்.
மேலும் தீ, புகை மூண்டால் அதுகுறித்து தொடக்கத்திலேயே கண்டறிந்து உடனடியாக எச்சரிக்கும் என்பதுடன் அவசர காலங்களில் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் என்றும் இந்திய ரயில்வே கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“ரயில்வே காவல்படையின் கீழ் ‘ஏஎஸ்சி அர்ஜுன்’ இயக்கப்படும். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் அமைப்பும் இதில் நிறுவப்பட்டுள்ளது.
“எந்தத் தகவலாக இருப்பினும் உடனடியாக இயந்திர மனிதன் அர்ஜுனின் குறிப்புகள் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து சேரும்,” என்றும் இந்திய ரயில்வே மேலும் தெரிவித்துள்ளது.

